அசாமில் பணம் இரட்டிப்பு திட்டம் ரூ.2,200 கோடி மோசடி புகாரில் நடிகை கைது: கணவரும் சிக்கினார்

கவுகாத்தி: பங்குசந்தை, ஆன்லைன் வர்த்தகம், பணம் இரட்டிப்பு திட்டத்தில் ரூ.2,200 கோடி மோசடி செய்த புகாரில் சிக்கிய நடிகை சுமி போரா மற்றும் அவரது கணவரை அசாம் போலீஸ் அதிரடியாக கைது செய்தது. அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகை சுமி போரா . இவரது கணவர் தர்கிக் போரா. நடிகை சுமி போரா, அவரது கணவர் தர்கிக் போரா, சகோதரர் ரஜிப் போரா மற்றும் அவரது மனைவி ஜிங்கி மிலி உள்ளிட்ட சிலர், 60 நாட்களில் இரட்டிப்பு பணம் தருதல் போன்ற திட்டங்களில் பலரிடம் மோசடி செய்துள்ளனர். மேலும் பங்குசந்தை வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

கடந்த வாரம், முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திப்ருகாரில் பிஷால் புகன் என்பவர் உள்ளிட்ட சிலரை, அசாம் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. அதில் ரூ.2200 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இவ்வழக்கில் நடிகை சுமி போரா உள்ளிட்ட சிலர் தலைமறைவாக இருப்பதால், அவர்களுக்கு எதிராக அசாம் காவல்துறை ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் சுமி போரா நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை அசாம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஜோர்ஹாட் மாவட்டம் தியோக்கில் பதுங்கியிருந்த சுமிபோரா மற்றும் அவரது கணவர் தர்கிக் போராவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 60 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 1,500க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணமோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 23ம் தேதி கவுன்சலிங் தொடக்கம்

இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்