கோடைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்: வனத்துறை அதிகாரி தகவல்

ஒடுகத்தூர்: கோடைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடுகத்தூர் வனப்பகுதிகளில் ராட்சத தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகளும் மற்றும் மலைகளும் பறந்து விரிந்து காணப்படுகிறது. இங்குள்ள வனப்பகுதிகளில் மான்கள், மயில், காட்டெருமை, காட்டுப்பன்றிகள், குரங்குகள், பாம்புகள் உட்பட பல்வேறு வன விலங்குகளுக்கு வசிப்பிடமாக இருந்து வருகிறது.

வனப்பகுதிகளை ஒட்டியவாறு ஏராளமான கிராமங்கள் உள்ளதால் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடியும், வழி தவறியும் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதனால், வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையிலும், கோடைக்காலத்திலும் வனத்துறை சார்பில் வனப்பகுதிகளில் ஆங்காங்கே ராட்சத தொட்டிகள், சிறு சிறு தடுப்பணைகள் கட்டி அதில் நீர் தேக்கி வருகின்றனர். அதன்படி, ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ராட்சத தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதுகுறித்து வனச்சரக அலுவலர் இந்து கூறுகையில், ‘கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனால், வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வனப்பகுதிகளில் உள்ள ராட்சத தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக, கடந்த ஒரு வாரமாக தண்ணீர் தொட்டிகளை நன்றாக சுத்தம் செய்து வனவிலங்குகள் எந்த சிரமமும் இன்றி தண்ணீர் குடிக்க ஏதுவாக ராட்சத தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு உள்ளது. அதேபோல், கோடைக்காலத்திலும் வனவிலங்குகளின் தாகத்தை போக்க நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்படும். தற்போது, 6 ராட்சத தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது’ என்றார்.

Related posts

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு

மராட்டியத்தில் வரலாற்று புகழ்பெற்ற ராய்கட் கோட்டையை சூழ்ந்த பெருவெள்ளம்: 30 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர்

பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு