ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக சாதனை: 104 பதக்கங்களை குவித்தது இந்தியா.! ஆண்கள் கபடி அணி, கிரிக்கெட் அணிக்கு தங்கம்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கபடி பிரிவின் இறுதிப்போட்டியில் சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று சாதித்துள்ளது. இதன் மூலம் இந்தியா ஆசிய போட்டிகளில் முதல் முறையாக 100வது பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 15வது நாளான இன்றும் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்றைய நாளின் முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என்று மொத்தமாக 95 பதக்கங்களுடன் 4வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதலே இந்திய வீரர்கள் பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர்.

மகளிருக்கான வில்வித்தை தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி வெண்கலம் வென்று அசத்தினார். தொடர்ந்து வில்வித்தை காம்பவுண்ட் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா தென் கொரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். இதனைத் தொடர்ந்து வில்வித்தையில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்தியாவின் ஓஜாஸ் தங்கப் பதக்கத்தையும், அபிஷேக் வர்மா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலமாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 99ஐ எட்டியது.

இதனைத்தொடர்ந்து மகளிர் கபடி பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சீன தைபே அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இதன் முதல் பாதி முடிவில் 14-9 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. இதன்பின் இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் சீன தைபே பதிலடி கொடுத்து முன்னேறி வந்தது. இதனால் போட்டியின் கடைசி 5 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. இரு அணி வீராங்கனைகளும் அபாரமாக ஆடினர். இருப்பினும் இந்திய வீராங்கனைகளின் சிறப்பான ரெய்டால் 26-24 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்தியா ஆசிய போட்டிகளில் 25வது தங்கத்தை வென்று அசத்தியுள்ளது.

இந்திய அணி இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆசிய போட்டிகளில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக இந்தியா 70 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. மேலும் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா, நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மட்டும் 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்மின்டன் பிரிவில் தங்கம்

இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் பேட்மின்டன் பிரிவில் ஆண்களுக்கான இரட்டையர் தங்கப் பதக்கப் போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக சாத்விக் சாய்ராஜ், சந்திரசேகர் இணை கலந்துகொண்டனர். இவர்களுக்கு போட்டியாக கொரியாவின் சோல்கியூ, வோன்ஹோ ஜோடி விளையாடியது. இதில் சாத்விக் சாய்ராஜ், சந்திரசேகர் இணை 21-18, 21-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், கொரியா அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இது பேட்மின்டனில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப்பதக்கம் ஆகும்.

இந்திய ஆண்கள் கபடி அணிக்கு தங்கம்

ஆண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி ஈரானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டி நிறைவடைய 2 நிமிடங்கள் இருந்தபோது நடுவரின் முடிவு குறித்து இரு அணிகளும் மாறி மாறி புகார் தெரிவித்ததால் போட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின், பிரச்சனை சரி செய்யப்பட்டு போட்டி தொடங்கியது. இறுதியில் 33 – 29 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தங்கம்

ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்த போது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. எனினும், இந்திய அணிக்கு தங்கம் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. கிரிக்கெட் போட்டியில் மகளிர் அணியும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வாழ்த்து

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் இதுவரை 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘ஆசிய விளையாட்டுப் போட்டியில் மிப்பெரிய சாதனையை இந்தியா அடைந்துள்ளது. 100 பதக்கங்களை வென்று குறிப்பிட்ட மைல்கல்லை எட்டியுள்ளோம். இதனால் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வரலாற்றை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு போட்டியும் சரித்திரம் படைத்துள்ளது. நம்முடைய இதயங்களை பெருமையடைய செய்துள்ளது. வரும் 10ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கும், நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related posts

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்

வலுக்கும் போராட்டம்

பதவியிலிருந்து சீக்கிரம் மோடியை தூக்கினால் இந்தியாவிற்கு நன்மை பயக்கும்: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி