ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி சென்னையில் இன்று கோலாகல தொடக்கம்: 6 அணிகள் பங்கேற்பு

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடர் சென்னையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2வது முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. ஏற்கனவே 2007ல் இந்த போட்டியின் 7வது தொடர் சென்னையில் நடந்தது. தற்போது 12வது தொடர் இங்கு மீண்டும் நடைபெற உள்ளது. எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கும் இத்தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் கொரியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்டு ராபின் லீக் சுற்றில் விளையாடும். லீக் சுற்று ஆக.9ம் தேதி நிறைவடைகிறது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஆக.11ல் அரையிறுதி ஆட்டங்களும், ஆக.12ல் பைனல் மற்றும் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.

* சென்னையில் 2007ல் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தபோது இந்தியா, சீனா, ஹாங்காங், வங்கதேசம், பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, இலங்கை, ஜப்பான் என 11 அணிகள் பங்கேற்றன.
* 2007 பைனலில் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றிப் பெற்ற அணிக்கு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கோப்பையை வழங்கி பாராட்டினார்.
* 3வது இடம் பிடித்த மலேசிய அணியில் தமிழரான செல்வராஜ் சந்திரகாசி இடம் பிடித்திருந்தார். இப்போதையே மலேசிய அணியை தமிழர்களான அந்தோனி அருள் பயிற்சியாளராகவும், குமார் சுப்ரமணியம் உதவி பயிற்சியாளராகவும் வழி நடத்துகின்றனர்.
* பாகிஸ்தான் அணி 2016க்கு பிறகு இந்தியாவில் விளையாட வந்துள்ளது. சந்தேகத்தில் இருந்த சீன அணியும் இந்தப்போட்டியில் விளையாட இருக்கிறது.
* இந்த தொடருக்காக தமிழக அரசு ரூ.17 கோடி செலவிடுகிறது.
* இதற்கு முன்பு நடந்த 11 ஆசிய சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியா, வங்கதேசம், மலேசியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் மட்டுமே பங்கேற்றுள்ளன. 12வது தொடரில் வங்கதேசம் மட்டும் பங்கேற்கவில்லை.

எழும்பூர் ஹாக்கி அரங்கம்
* மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 16 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
* பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பயன்படுத்தப்பட உள்ள செயற்கை புல்தரை ரூ.9கோடி மதிப்பிலான ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டது. இந்த வகை செயற்கை புல் தரை ஆடுகளம் உலகில் முதல்முறையாக சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதே செயற்கை புல்தரையை கொண்டு பயிற்சி ஆடுகளமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
* சுமார் 90 நாட்களுக்குள்ளாக எழும்பூர் அரங்கத்தின் இருக்கைகள், அறைகள், முகப்பு, வரவேற்பு அறை, ஊடகத்தினருக்கான மாடம் ஆகியவை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
* இந்த அரங்கில் 8670 பேர் அமர்ந்து ஆட்டத்தை ரசிக்க முடியும். போட்டியை காண்பதற்கான அனுமதிச் சீட்டுகள் ரூ.300, ரூ.400 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

கோப்பை வலம்
* பல்வேறு மாநிலங்கள் வழியாக தமிழகம் வந்த கோப்பையை ஹாக்கி இந்தியா அமைப்பு ஜூலை 6ல் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது. பின்னர் தமிழகத்தின் 38 மாவட்டங்களின் வழியாக ஜூலை 20 முதல் பயணித்து ஜூலை 31ல் மீண்டும் சென்னை வந்து சேர்ந்தது. இந்த பயணத்தின்போது எல்லா மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளும் நடந்தன.

பொம்மன் கதை
* ஆசிய கோப்பை விளையாட்டின் சின்னமாக ‘பொம்மன் யானை’ தேர்வு செய்யப்பட்டது. ஆதரவற்ற யானைகளை பாதுகாப்பதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொம்மன்-பெல்லி தம்பதிகளை கவுரவிக்கும் வகையில் யானை சின்னமும், அதற்கு பொம்மன் என்ற பெயரும் சூட்டப்பட்டது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி ஜூலை 20ல் சென்னை மெரீனாவில் நடந்தது. அதில் பொம்மன் தம்பதிகளும் பங்கறே்றனர்.

கலைஞர் மாடம்
* விளையாட்டு ஆர்வலரும், விளையாட்டுக்கென தனித்துறையை உருவாக்கியவருமான முன்னாள் முதல்வர் கருணாநிதியை கவுரவிக்கும் வகையில், எழும்பூர் அரங்கில் புதுப்பிக்கப்பட்ட பார்வையாளர் மாடத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

* பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி… அமைச்சர் உதயநிதி தகவல்
‘ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியை காண தமிழகம் முழுவதிலும் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் அழைத்துவரப்பட்டு, இலவசமாக பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: பெரும்சிறப்பு வாய்ந்த விளையாட்டுப் போட்டியை 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் நடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். தொடர்ந்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் விளையாட்டுக் களமாக சென்னை உருவாகி உள்ளது. சர்வதேச போட்டிகளை மட்டுமின்றி மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான போட்டியையும் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக நடத்தியுள்ளோம்.

இந்த ஆசிய கோப்பை போட்டியை நடத்த வசதியாக மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கான முன்னோடியான கலைஞர் பெயரை, புதுப்பிக்கப்பட்ட கேலரிக்கு சூட்டியுள்ளோம். நடப்பு சாம்பியனாக கொரியா அணி உள்ளது. இந்தமுறை இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி எல்லா அணிகளுக்கும் உரிய பாதுகாப்பு, நட்சத்திர விடுதிகளில் தங்கும் வசதி, தரமான உணவு, வாகன வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்கு அரசுப் பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவர்கள், மாணவிகள் அழைத்து வரப்பட்டது போல், இந்தப்போட்டிக்கும் மாணவர்களை அழைத்து வர இருக்கிறோம். தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துவரும்படி எல்லா எம்எல்ஏ, எம்பிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். அவர்கள் கட்டணமின்றி போட்டியை காண அனுமதிக்கும்படி சொல்லியிருக்கிறேன். இது தவிர தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ‘ரசிகர் பூங்கா’ ஏற்படுத்தி உள்ளோம். அங்கு பிரமாண்ட திரைகளில் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறோம். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரர்கள் அனைவரையும், ஒருவரைக் கூட விட்டு விடாமல் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் கவுரவிக்க இருக்கிறோம்.

* சிறப்பான ஏற்பாடுகள்
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் உள்ளது. இந்தப் போட்டி நல்ல ஆரம்பமாகவும், புதிய பாதையாகவும், நிரந்தர அடையாளமாகவும் திகழும். இவ்வளவு நாட்கள் ஏன் இதுபோன்ற போட்டியை நடத்தவில்லை என்று அமைச்சரிடம் கேட்கிறீர்கள். அதற்கு நான் பதில் சொல்கிறேன். போட்டியை நடத்துவதற்கான பன்முகத் திறமை வாய்ந்த தலைவர் (அமைச்சர்) இப்போதுதான் இங்கு இருக்கிறார். ஆசிய விளையாட்டுப்போட்டி மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டியை நடத்தவும் முடியும். வீரர்களின் நலன் கருதிதான் பெனால்டி கார்னர் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய முயற்சியில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால், அந்த விதிகளில் மீண்டும் மாற்றம் செய்யப்படும். – எப்ஐஎச் தலைவர் முகமது இக்ரம்

* பாகிஸ்தான் செல்வோம்
பாகிஸ்தான் ஹாக்கி அணி இங்கு வந்து விளையாடுவது போல் நாங்களும் பாகிஸ்தான் சென்று விளையாடுவோம். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஒன்று பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அதில் விளையாட கட்டாயம் இந்திய அணி செல்லும். – ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்க்கி

* ரசிகர்கள் ஆர்வம்
ஆக.9ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை பார்ப்பதற்கான அனுமதிச் சீட்டுகள் 70 சதவீதம் விற்பனையாகி உள்ளன. அதே நேரத்தில் நாக் அவுட் சுற்றுகளுக்கான டிக்கெட்கள் முழுமையாக விற்று தீர்ந்து விட்டன. – விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை