ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் இந்தியா- பாகிஸ்தான் மீண்டும் பலப்பரீட்சை: சூப்பர்-4 சுற்றில் விறுவிறு…

கொழும்பு: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் சூப்பர்-4 சுற்று லீக் ஆட்டத்தில், இந்தியா இன்று மீண்டும் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நடப்பு தொடரின் முதற்கட்ட லீக் சுற்றில், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான், 3வது இடத்தில் உள்ள இந்தியா மோதிய ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. முதலில் பேட் செய்த இந்தியா 48.5 ஓவரில் 266 ரன்னுக்கு ஆல் அவுட்டான நிலையில், பாகிஸ்தான் இன்னிங்ஸ் தொடங்காமலேயே போட்டி ரத்தானது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. நேபாள அணியை பாகிஸ்தான் 104 ரன்னில் சுருட்டிய நிலையில், இந்தியா 230 ரன் வாரி வழங்கியது.

ஆசிய கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இன்னும் மேம்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பீல்டிங்கிலும் பல கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டதால், இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. உலக கோப்பைக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டாலும், இந்த மாத இறுதி வரை மாற்றங்கள் செய்யும் வாய்ப்பு உள்ளதால், தேர்வுக் குழுவினரின் கவனம் முழுவதும் ஆசிய கோப்பை தொடரின் மீது திரும்பியுள்ளது. இந்த நிலையில், சூப்பர்-4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் இன்றைய லீக் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ள ராகுல் களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணியில் காயம் காரணமாக அவதிப்படும் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா விளையாடுவாரா என்பது உறுதியாகவில்லை. சூப்பர்-4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான், இப்போது 2வது ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளதால், மழை குறுக்கிட்டாலும் முடிவு கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என நம்பலாம். வழக்கம் போல, இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கே உரிய பரபரப்பு/விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

அணிகள்

* இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), விராத் கோஹ்லி, ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), அக்சர் படேல், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர்.

* பாகிஸ்தான்: பாபர் ஆஸம் (கேப்டன்), அப்துலா ஷபிக், பகார் ஸமான், இப்திகார் அகமது, இமாம் உல் ஹக், முகமது ஹாரிஸ், முகமது ரிஸ்வான் (கீப்பர்), சவுத் ஷகீல், ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆஹா சல்மான், பாகீம் அஷ்ரப், முகமது நவாஸ், முகமது வாசிம், ஹரிஸ் ராவுப், நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி, உசாமா மிர்.

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது