அஷ்டகொடி

பெரிய சிவாலயங்களில் நடைபெறும் விழாக்களில் சிறப்புப் பெற்ற விழா அஷ்டகொடி விழாவாகும். இதில் எட்டுத் திக்கிலும் கொடியேற்றி விழா கொண்டாடு கின்றனர். கொடிகளுக்குச் சிறப்பளிக்கும் விழாவாக இது உள்ளது. கொடிகள் வண்ணத் துணிகளால் அழகாகத் தைக்கப்பட்டு, அதில் இலச்சினை எனப்படும் உருவங்கள் அமைக்கப்படும்.

திருமாலுக்குக் கருடன் உருவம் பொறித்த கொடியும், சிவபெருமானுக்கு இடபம் பொறித்த கொடியும், விநாயகருக்கு மயில் கொடியும், ஐயனாருக்கு யானைக் கொடியும் அடையாளங்களாக உள்ளன. கொடிகளைக் கொண்டே மக்கள் இன்ன மாதிரியான விழா அங்கே நடைபெறுகிறது என்பதை அறிந்து கொண்டனர். கொடியேற்றம் என்பது உரிமையை வெளிப்படுத்தும் அடையாளமாக உள்ளது.

பெரிய கோயில்களில் கொடியேற்றமும், கொடியிறக்கமும் திருவிழாவின் முக்கியமான அங்கங்களாக உள்ளன. விழாவின் தொடக்கத்தில் கொடியேற்றம் நிகழ்கிறது. சிறப்புடன் நடை
பெறும் விழா கொடியிறக்கப்படுவதுடன் இனிதே நிறைவடைகிறது. பெருந்திருவிழா நடைபெறும் அனைத்து ஆலயங்களிலும் நிரந்தரமான கொடி மரம் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாகச் சிறிய கொடிமரங்கள் எட்டுத்திக்கிலும் இருப்பதையும் காண்கிறோம். அட்டதிக் துவஜ விழாவில் இக்கோடி மரங்களில் கொடியேற்றம் நிகழ்கிறது. கொடிகள் தலைவனாக இந்திரன் விளங்குகிறாள். அவனே மக்களின் தலைவன். அவனே அவரவர்க் குரிய உரிமைகளை வகுத்தளிப்பவன். அந்த உரிமைகள் அவர்கள் பெற்றிருப்பதைக் குறிக்கும் வகையில் அவர்களுக்கு உரிய சின்னத்தைப் பொறித்த கொடியை அளித்துள்ளான். கொடிகள் யாவும் இந்திரனுடைய கொடியில் இருந்தே பிறந்ததாகும்.

கொடியின் சிறப்பு கருதி கொடியை இந்திரத் துவஜம் என்று அழைக்கின்றனர். மார்கழி மாதத்தில் இந்திரன் தேவர்களோடு பூமிக்கு வந்து ஆலயங்களை வழிபடுவதுடன், தாம் வந்து வழிபட்டதன் அடையாளமாக விமானங்களின் உச்சியில் தமது கொடியை ஆலயங்களில் பறக்கவிடுகிறான். அவனைத் தொடர்ந்து சகல தேவர்களும் எண்திசைப் பாலகர்களும் தத்தம் கொடிகளை ஆலயத்தின் விமானத்திலும் பிராகாரத்திலும் பறக்கவிடுகின்றனர்.

இதற்கு இந்திரத் துவஜவிழா என்பது பெயராகும். தேவர்கள் போல எண்ணற்ற கொடிகளை நாம் பறக்கவிட முடியாது என்பதால், எட்டுத்திசைப் பாலகர்களுக்குரிய கொடியை மட்டும் பெரிய பிராகாரத்தில் அவரவர்களுக் குரிய திசைகளில் ஏற்றி விழா கொண்டாடுகிறோம். இதுவே அஷ்ட கொடி உற்சவம் எனப்படுகிறது. இவ்விழாவில், சிவபெருமான் பரிவாரங்களுடன் எழுந்தருளி ஒவ்வொரு கொடிமரத்தின் முன்னின்றும் சிறப்பு வழிபாடுகளை ஏற்றுக் கொள்ளுகின்றார். இந்த எட்டுக் கொடி மரங்களும் அட்டதிக்குப் பாலகர்கள் முன்னின்று ஏற்றி வழிபடும் கொடிமரமாக இருக்கின்றன.

எனவே அவர்கள் தத்தம் இலச்சினையாக உள்ள உருவங்களையே கொடியில் பொறித்து ஏற்றியதால், இப்போதும் அந்த சின்னங்களைப் பொறித்து ஏற்றுவதாகக் கூறுகின்றனர். அவ்வகையில், கிழக்கில் யானையும், தென்கிழக்கில் ஆட்டுக்கடாவும், தெற்கில் எருமையும், தென்கிழக்கில் பூதமும், மேற்கில் மகரமும், வடமேற்கில் தேரும், வடக்கில் குதிரையும், வடகிழக்கில் இடபமும் பொறிக்க கொடிகளை ஏற்றிச் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.

மேலும், இந்திரன் தானே முன்னின்று இந்த எட்டுக் கொடிகளை ஏற்றுவதாகவும் கூறுகின்றனர். அதனால் எட்டுக் கொடிகளிலும் திசை யானைகளின் உருவம் பொறித்த கொடிகளை ஏற்றி வழிபடுவதாகக் கூறுகின்றனர். எட்டுக் கொடிகளின் நிறத்தையும் அதில் எழுதப்பட்டிருக்கும் திசை யானைகள் எட்டைப் பற்றிய வர்ணனையையும் புராண நூல்கள் விரிவாகக் குறித்துள்ளன. சிலர் சிவபெருமானுக்கு இடபமே உரியது என்பதால், திசை பாலகர்கள் எட்டுத் திக்கிலும் இடபக்கொடிகளையே ஏற்றி வழிபட்டனர் என்கின்றனர்.

அதையொட்டி எட்டுத் திசைகளிலும் இடபம் பொறித்த கொடிகள் ஏற்றப்படுகின்றன. கொடிகளில் பொறிக்கப்படும் உருவங்களைப் பற்றிய கருத்துகள் பலவாக இருப்பினும், இந்திரன் திக்பாலகர்களுடன் நடத்தும் விழாவாக அஷ்ட கொடி உற்சவம் இருக்கிறது என்பதில் கருத்து வேறு பாடில்லை. திருவாரூர், தியாகேசர் ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், திருவிடைமருதூர், மகாலிங்கசாமி ஆலயம், திருச்சி திருவானைக்கா ஜம்புகேசுவரர் ஆலயம் முதலியவற்றில் நடைபெறும் அஷ்டகொடி விழாக்கள் புகழ் பெற்றவைகளாகும்.

திருவானைக்காவில் நடைபெறும் இந்த விழா பஞ்சப் பிரகாரவிழா என்றழைக்கப்படுகிறது. இதில் சிவபெருமான் பெண்வேடமும், அம்பிகை ஆண்வேட அலங்காரத்துடனும் பவனி வருகின்றனர். அஷ்ட கொடியேற்றிச் செய்யும் விழாவில் பாலகர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அவர்கள் அருளால் உலகம் செழிக்கிறது.

ராதாகிருஷ்ணன்

Related posts

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 79 (பகவத்கீதை உரை)

தெளிவு பெறுவோம்

மனநலத்தை சீர்படுத்தும் குணசீலம்