ஆசிரமத்தில் குத்தாட்டம் போட்ட இலைக்கட்சி நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நூற்றுக்கணக்கானோரை சேர்ப்பதா சொல்லி இலைக்கட்சியில் ஐக்கியமான குக்கர் நிர்வாகிக்கு செமடோஸ் விழுந்தது தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தாமரை கட்சி கூட்டணி சார்பில் பலாப்பழக்காரர் கடலோர மாவட்ட தொகுதியில் சுயேச்சையாக ேபாட்டியிட்டாரு.. அவருக்கு ஆதரவா குக்கர் தரப்பினர் மாவட்டம் முழுவதும் கடுமையான வேலை பார்த்தாங்க.. ஆனால், பலாப்பழ தரப்ேபா, குக்கர் தரப்பினரை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக, குக்கர் தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாவட்ட முக்கிய நிர்வாகியை, பலாப்பழ தரப்பு சீண்டவே இல்லையாம்.. பெரும்பாலான இடத்திற்கு அவருக்கு அழைப்பு கூட விடுக்கவில்லையென குக்கர் தரப்பு குமுறி வந்தது. தேர்தல் பணிகளில் இருந்தும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டார். இதுகுறித்து அந்நிர்வாகி, குக்கர் தலைவரிடம் முறையிட்டாராம்.. அவரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.. இதனால் தலைமை மீது விரக்தியில் இருந்த நிர்வாகி, தேர்தல் முடிந்ததும் சேலத்துக்காரரை தொடர்பு கொண்டு இலைக்கட்சியில் ஐக்கியமாகி விட்டார்.. அப்போது தனது தரப்பில் இருந்து நூற்றுக்கணக்கானோரை கட்சியில் சேர்த்து விடுவதாக சேலத்துக்காரரிடம் கூறியிருக்கிறாரு.. இதையடுத்தே சேலத்துக்காரர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைச்சிருக்கு.. ஆனால், நிர்வாகியை தவிர வேறு யாருமே இலைக்கட்சியில் சேரவில்லையாம்.. விசாரித்ததில், சின்ன மம்மி சுற்றுப்பயணம், ஏதாவது மாற்றம் தருகிறதா என பார்த்து விட்டு, வெயிட்டான பதவியுடன் போய்ச்சேரலாம்னு காத்திருக்கின்றனராம்.. கொடுத்த பிராமிசை காக்க தவறியதால் நிர்வாகிக்கு சேலத்துக்காரர் தரப்பில் இருந்து செம ேடாஸ் விழுந்துச்சாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆசிரமத்தில் குத்தாட்டம் போட்ட இலைக்கட்சி பார்ட்டி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்காமே…’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர்ல அப்பா என்ற அடைமொழிகொண்ட சாமியார் ஒருவருக்கு வடமாநிலத்தில் ஆசிரமம் உள்ளதாம்.. அவருக்கு அங்க நல்ல செல்வாக்கு இருக்குறதா ெசால்றாங்க.. சமீபத்துல அந்த ஆசிரமத்துல ஒரு புரோகிராம் நடந்திருக்குது.. அதுக்காக உள்ளூர்ல தனக்கு இருக்கிற வெயிட்ட காண்பிக்கிற மாதிரி சாமியார் வெயிலூர்ல இருந்து லோக்கல் பொலிடிக்கல் பார்ட்டிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்காரு.. இதுல இலை பார்ட்டியில இருந்து செல்லமான பெயர் கொண்டவரு தன்னோட ரத்தத்தின் ரத்தங்களுடன் கிளம்பி போயிருக்குறாரு.. அவரோட சத்தான பகுதி பிரமுகரும் போயிருக்குறாரு.. போன இடத்துல இவங்க சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஜமாய்ச்சிருக்காங்க.. இந்த குத்து ஆட்டம் தான் வெயிலூர்ல இருக்குற சமூக வலைதளங்கள்ல பரவிவருது.. இதை பார்த்து அதிர்ச்சியான ரத்தத்தின் ரத்தங்களோ, நடந்த எலக்‌ஷன்ல டெபாசிட் கூட வாங்க முடியாம கட்சி வேகமா பின்னுக்கு போய்க்கிட்டிருக்குது.. புது நண்பரா சத்தான பகுதி பிரமுகர சேர்த்துக்ெகாண்டு ஆடிய இவங்களோட குத்தாட்டத்தை பார்த்தியான்னு வசைபாடி வர்றாங்களாம்.. இந்த வீடியோதான் இப்ேபா வெயிலூர் மாவட்டத்தில பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாவட்ட செயலாளர் பதவியை தக்க வைக்க சேலத்துக்காரரை ‘ஐஸ்’ வைக்கும் வேலையில் இறங்கிட்டாராமே மாஜி அமைச்சர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ சேலத்துக்காரர் அணியில் இருந்து வருகிறாரு.. தனது சொந்த தொகுதியில் உள்ளவர்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி இலை கட்சியில் இணைந்து வருபவர்களை சேலத்துக்காரரின் ஊருக்கே அழைத்து சென்று கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறாராம்.. இது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியிருக்காம்.. கட்சியின் தலைமைக்கு அழைத்து செல்லாமல் சேலத்துக்காரரின் சொந்த ஊருக்கே அழைத்து செல்கிறாரேன்னு கட்சிக்குள்ளே பலரும் கேள்வி எழுப்பி வர்றாங்களாம்… இதற்கு முக்கிய காரணம், ‘‘மாஜி அமைச்சர் ஒருவர் தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரரிடமே மீண்டும் சேர்ந்துள்ளதால் இலை கட்சி தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காம்.. இதனால் கிலியில் இருந்து வரும் மணியானவர், இப்படியே சென்றால் நமது மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்துடும்னு அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் தெரிவித்து இருக்கிறாரு.. இதனால் மாவட்ட செயலாளர் பதவியை தக்க வைக்க சேலத்துக்காரரை ‘ஐஸ்’ வைக்கும் முயற்சியாக, இதே மாதிரி வேலையில் மணியானவர் இறங்கியுள்ளதாக கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவரை நிழலானவர் திடீர்னு புகழ்ந்து தள்ளியது தொண்டர்களை பரபரப்புக்குள்ளாக்கி இருக்காமே…’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சாதாரண கிளைச்செயலாளராக இருந்து இவ்வளவு பெரிய கட்சிக்கு பொதுச்செயலாளரா வந்துள்ளது என்பது மாங்கனி மாநகருக்கு மட்டுமின்றி வரலாற்று சாதனை என அவ்வப்போது தனக்கு தானே புகழ்ந்து கொள்கிறாராம் இலைக்கட்சி தலைவர். அதுவும் வரலாற்றில் இடம்பிடிப்பதில் கெட்டிக்காரராக இருப்பதாக கட்சிக்காரர்களே புகழ்ந்து தள்ளுறாங்க.. கட்சியை நிறுவியவராகட்டும், மம்மியாகட்டும், யாருமே கட்சியின் உறுப்பினர்களுக்கு அட்டைதான் கொடுத்தாங்க.. அந்த அட்டையை இப்போது தேடினாலும் கிடைக்காது. ஆனால் நீண்ட நாள் நீடித்திருக்கும் வகையில் ஒரு அடையாள அட்டையை தயாரிக்க வேண்டும், கட்சியின் ரெண்டு கோடி தொண்டர்களின் கைகளிலும் எனது கையெழுத்து போட்ட அட்டை இருக்க வேண்டும்னு கனவு கண்டாராம் இலைக்கட்சி தலைவர்.. அதனை செயல்படுத்தும் வகையில் உறுப்பினர் உரிமை சீட்டு என லேமினேசன் செஞ்ச ஒரு அடையாள அட்டையை தயார் பண்ணிட்டாராம்.. அதுவும் பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு மேல இலைக்கட்சி தலைவரோட கையெழுத்துடன் அட்டையில் மின்னுறாராம்.. மம்மி படம் எப்படி இருக்கணுமோ அதே அளவில் அவரது படத்தையும் பிரின்ட் பண்ணியிருக்காராம்.. அதன் பின் பக்கம் உறுப்பினர்களின் முழுவிவரமும் இடம் பெற்றிருக்காம்.. இந்த அடையாள அட்டை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.. ஆடி 18க்கு பிறகு ஒரு நல்ல நாளில் அதை வழங்க இலைக்கட்சி தலைவர் முடிவு செஞ்சிருக்காராம்.. எங்கள் தலைவர் சாதனைக்கு மேல சாதனை செய்வாருன்னு அவரது அடிப்பொடிகள் மகிழ்ச்சியா சொல்றாங்க.. அதே நேரத்துல இலைகட்சி தலைவரோட நிழலானவரு ஒருபடி மேல போய், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இவ்வளவு ஓட்டு கிடைச்சதுன்னா அது ஒரு தனி மனிதனுக்கு விழுந்த ஓட்டுன்னு இலைக்கட்சி தலைவரை புகழ்ந்தாராம்.. இருவருக்கும் இடையில் விரிசல் விழுந்துருக்குன்னு கட்சிக்காரர்கள் பேசி வரும் நிலையில் இந்த திடீர் புகழ்ச்சி எங்கு போய் நிற்கப்போகுதோன்னு இலைக்கட்சி தொண்டர்கள் பரபரப்பாயிருக்காங்க…’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு