ஏறுமுகம்

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த மாதம் 27ம்தேதி ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்பினார். அவர், 8 நாள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். வரும் 7ம்தேதி சென்னை திரும்புகிறார். கடந்த 2022-ம் ஆண்டு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றார். அந்த பயணத்தில், 15,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.6,100 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றபோது, 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.1,342 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இவ்விரு பயணங்கள் மூலமாக, 17,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.7,442 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல்வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவ துவங்கிவிட்டன. உதாரணமாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓம்ரான் மற்றும் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை நிறுவ துவங்கியுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட இரண்டே மாதங்களில், ஓம்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். தற்போது கட்டுமான பணிகள் விறு விறுப்பாக நடக்கிறது.

இதேபோன்று, சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த கேப்பிடாலேண்டு நிறுவனத்தின் ஐ.டி பூங்கா-வை சமீபத்தில் முதல்வர் துவக்கி வைத்தார். ஐக்கிய அரபு நாடுகளில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், லூலூ பன்னாட்டு குழுமம், கோவையில் தனது திட்டத்தை துவக்கியுள்ளது. இந்த வரிசையில், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளை போன்றே, ஸ்பெயின் நாட்டிலும், முதலீட்டாளர்களை ஈர்க்க முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என அங்குள்ள ரோகா மற்றும் கெஸ்டாம்ப் உள்ளிட்ட பெரும் தொழில் நிறுவனங்களுடனும், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற முதலீட்டு அமைப்புடனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதன் பயனாக, சர்வதேச அளவில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ‘’ஹபக் லாய்டு’’ நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. அதாவது, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று முன்தினம் கையெழுத்தாகியுள்ளது. இப்புதிய முதலீடு மூலம் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

அத்துடன், தமிழகத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கும் இத்திட்டம் வழிவகுக்கிறது. இதேபோல், தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ள, அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது. இப்படி, தொடர்ச்சியாக அந்நிய முதலீடுகள் குவிந்தவண்ணம் உள்ளன. தமிழகத்தில் தொழில்முதலீடுகளை குவிப்பதில், திராவிட மாடல் அரசு, தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணிக்கிறது. இது, பிற மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழ் மக்களையும், புதிதாக வேலைவாய்ப்புகளை பெறும் இளைஞர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு