ஏற்றமிகு ஏறு தழுவுதல்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் மிகவும் முக்கியமானது ஜல்லிக்கட்டு. ஏறு தழுவுதல் என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டானது, ஆண்டுதோறும் ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்படும். தடை விதிப்புக்கு பின் நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்றி, ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு கடந்த 6ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் நடந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி, மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்கள் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பொங்கலன்று (ஜன. 15) அவனியாபுரம், நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கலன்று (ஜன. 16) பாலமேடு, நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்தேறின.

தென்மாவட்டங்களை பொறுத்தவரை இந்த 3 நாட்களும் கொண்டாட்டமானவை. வாடிவாசலில் இருந்து திமிலை காட்டி களமிறங்கும் காளையை, தில்லாக பாய்ந்து திமிலை பிடித்து இறுக்கியபடி, வீரத்திமிர் காட்டும் மாடுபிடி வீரரை காண்பதே மிகவும் பரவசமான நிகழ்வு. பொங்கலன்று 817 காளைகள், 435 வீரர்களுடன், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து கிராம கமிட்டி சார்பில் நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் 840 காளைகள் களமாடின. 500 வீரர்கள் களமிறங்கினர். நேற்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இங்கு 800க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. தொடர்ந்து 3 நாட்களும் ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்தவித உயிர் சேதமுமின்றி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. திருச்சி அருகே பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டும் நல்ல முறையில் நடந்துள்ளது. இதற்கு தமிழக அரசின் முன்னேற்பாடுகளே முக்கிய காரணமாகும். ஜல்லிக்கட்டை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் மதுரை அருகே கீழக்கரையில் சுமார் ரூ.61 கோடி செலவில் பிரமாண்டமாக கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் பேர் வரை அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் குடும்பத்துடன் ஜல்லிக்கட்டை ரசித்து மகிழலாம். வரும் ஜன. 24ல் இந்த அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ஐபிஎல் போட்டிகளை போல ஜல்லிக்கட்டு லீக் போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, 5 மாதங்கள் மட்டுமே நடைபெறும் ஜல்லிக்கட்டை ஆண்டு முழுவதும் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை, காளை உரிமையாளர்கள், வீரர்கள் தரப்பில் எழுப்பப்பட்டது. இதனை மனதில் கொண்டு புதிய அரங்கத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன், கிரிக்கெட் மைதான கேலரி போல அமைக்கப்பட்ட இந்த அரங்கமானது ஜல்லிக்கட்டை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அளவில் புகழ் சேர்க்கும் முயற்சியாக, கடல் கடந்து இலங்கையில் இம்மாத முதல் வாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு மட்டுமா…? உறியடித்தல், கபடி, கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் என எண்ணற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் தமிழகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக, சர்க்கரை பொங்கல் போல இனிமையாக கடந்து சென்றுள்ளது. நாகரிக பாதையில் வாழ்க்கை சென்றாலும், பாரம்பரியம் போற்றும் விழாக்களையும் மறவாமல் கொண்டாடி மகிழ்வோம்.

Related posts

சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!!

வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற பெண் கைது!