எம்பி சீட்டு கைநழுவி போனதால விரக்தியில இருக்கும் புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘யாருக்காவது சீட் கொடுங்க… பிரசாரத்திற்கு மட்டும் வர்றோம்னு ஜகா வாங்கிய தாமரைக் கட்சி நிர்வாகிங்க கதையை சொல்லுங்க’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்ட மக்களவை தொகுதியை குறிவைச்சு தாமரை கட்சி பல ஆண்டாக வேலை செய்து வந்தது. பலர் போட்டியில் இருந்தனர். ஆனால், இலைக்கட்சியுடனான கூட்டணி முறிவுக்கு பின், அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலர் தேர்தலில் போட்டியிட விரும்பாமல் ஜகா வாங்கிட்டு வர்றாங்களாம்.. துவக்கத்தில் இருந்தே போட்டியிட ஆர்வம் காட்டி வந்த முன்னாள் தேசிய செயலாளரான சர்ச்சை பேச்சாளர், பின்னர் தோல்விக்கு பயந்து போட்டியிட போவதில்லையென அறிவித்தாராம்.. தற்போது கேட்டு பார்ப்போம் என மாநில தலைமை கேட்டும், ‘முடியாதுப்பா… ஆள விடுங்க… பிரசாரம் வேணும்னா செய்றேன்’னு சைலன்ட் மோடுக்கு போய் விட்டாராம்… சரி.. மாவட்ட முன்னாள், இந்நாள் தலைமைகள், இலைக்கட்சியில் இருந்து தாவிய மாஜி எம்எல்ஏ என பலரை கேட்டும், யாருமே தலையை அசைக்கவில்லையாம்.. பேசாமல், கூட்டணியில சேரும் வேறு யாருக்காவது சீட் கொடுங்க… வேலை செய்றோம். எங்களை விட்டுருங்க என கட்சியினரின் கதறல் சவுண்டு கேட்பதால், மாநில தலைமை விழிபிதுங்கி இருக்காம்.. ஒருவழியா இலைக்கட்சியில் இருந்து அணி மாறிய மாஜி எம்எல்ஏவை சம்மதிக்க வைக்க பெரும் போராட்டமே நடந்து வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலத்துக்காரர் வீட்டிற்கு ஆதரவாளர்களோடு சென்ற மன்னர் மாவட்ட மாஜி அமைச்சர்பற்றி தான் ரத்தத்தின் ரத்தங்கள் பரபரப்பா பேசிக்கிட்டு இருப்பதாக சொல்றாங்களே என்னவாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில சேலம்காரர், தேனிக்காரர் என ரெண்டு அணியா செயல்பட்ட போது மனுநீதி சோழன் மாவட்டத்தில் கர்மவீரர் பெயரை கொண்டவரான மாஜி அமைச்சர், தேனிக்காரர் அணிக்கு போயிடலாம்னு முடிவு செஞ்சி வைச்சிருந்தாராம்.. அப்போது சேலத்துக்காரர், தனக்கு வேண்டியவங்க மூலமா கர்ம வீரர் பெயர் கொண்டவரை ரகசியமா கண்காணிச்சுட்டு வந்தாராம்.. அப்புறம், கட்சியில் ஒரு வழியா சேலத்துக்காரர் கை ஓங்கவே அவரது அணியில் இருப்பது என கர்மவீரர் முடிவு செஞ்சி சேலத்துக்காரர் அணியிலேயே இருந்து வருகிறார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மதுரை மாநாட்டிற்கு, கர்மவீரர் பெயர கொண்டவர்தான் உணவு குழு பொறுப்பாளராக சேலத்துக்காரர் நியமித்திருந்தார். இலை ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சரா இருந்தவருக்கு மாநாட்டில் கூட உணவு தயாரிக்கும் பணியை சரிவர செய்ய முடியவில்லைன்னு தொண்டர்கள் மட்டுமின்றி சேலத்துக்காரரும் மாஜி மீது கடும் அதிருப்தியில் இருந்தார். தேனிக்காரருக்கு ஆதரவாகவும், தனக்கு எதிராகவும் செயல்படுகிறாரா என அவர் மேல சேலத்துக்காரருக்கு இன்னும் சந்தேகம் இருக்காம்…

இந்த தகவல நிர்வாகிகள் மூலம் தெரிஞ்சிக்கிட்ட அந்த மாஜி அமைச்சர், சேலத்துக்காரருக்கு தான் விசுவாசமாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக புதுவருடம் பிறப்பதற்கு முதல்நாள் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் என நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் என 500 பேரை சொந்த செலவில் வாகனம் மூலம் சேலத்துக்கு திரட்டி கொண்டு சென்றுள்ளார். அப்போது, சேலத்துக்காரருக்கு பொக்கை கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததோடு, உங்களுக்கு தான் விசுவாசியாக தற்போது வரை உள்ளேன் என உறுதிபடுத்திவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார். மன்னர் மாவட்டத்தில் இந்த டாப்பிக்கை தான் ரத்தத்தின் ரத்தங்கள் பேசி வருகின்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘எம்பிக்கு ஆசைப்பட்டு போன சிலரிடம் எல்லாத்தையும் அவங்களே வைத்துக்கொள்ளட்டும்னு விரக்தியில புலம்பித் தள்ளினாராமே புல்லட்சாமி’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தாமரை போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம்.. ஒரே ஒரு தொகுதியை என்.ஆர். காங்கிரஸ் ஜெயிச்சு என்ன பண்ணப்போகுது.. அதோடு தேர்தலில் போட்டியிட ‘ப’ விட்டமின் எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டும். தற்போதைய நிலைக்கு ‘ப’ விட்டமின் அதிகம் வைத்திருக்கிற தாமரையே தொகுதியை வைத்துக்கொள்ளட்டும்னு புல்லட்சாமி கூறிவிட்டாராம். இதனால, எம்பிக்கு ஆசைப்பட்டு சிலர், நான் பார்த்துக்கொள்கிறேன், சீட்டை எப்படியாவது தாமரையிடம் கேட்டு வாங்குங்கள் என புல்லட் சாமியிடம் சொன்னாங்களாம்.. அதற்கு, நம்மிடம் ஒரு பேச்சுக்குகூட இதுவரை தாமரை கேட்கவில்லை. அவர்களே இந்த தொகுதி எங்களுக்குத்தான் என அறிவித்துவிட்டு தேர்தல் வேலையை தொடங்கிட்டாங்க. ஏற்கனவே 3 நியமன எம்எல்ஏக்களை என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் நிரப்பிட்டாங்க. அதுமாதிரி, ராஜ்யசபா எம்பியையும் எடுத்துக்கொண்டுவிட்டனர். இப்போது மட்டும் என்னிடம் கேட்கவா போறாங்க. அதனால்தான் அவர்களே வைத்துக்கொள்ளட்டும், என கை கழுவிவிட்டேன்னு விரக்தியா கூறினாராம். ஆனால் எது எப்படியிருந்தாலும், என் பிரசாரம் இல்லாமல் தாமரை வெற்றிபெற முடியுமா என கேள்வி எழுப்பியதுடன் என்னை பிரசாரத்துக்கு அழைக்க வந்துதானே ஆகணும். அப்போது பார்த்துக்கொள்கிறேன் அவர்களை என்றாராம்’’ என சொல்லி முடித்தார் விக்கியானந்தா.

Related posts

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது