எல்லை என்பது எதுவரை…

நன்றி குங்குமம் தோழி

சமூக வலைத்தளங்களால் பறிபோகும் உயிர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பால்கனியில் இருந்து தவறி விழுந்து, சக குடியிருப்புவாசிகளால் மீட்கப்பட்ட குழந்தையை பலருக்கும் நினைவிருக்கும். குழந்தையை சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை எனத் தொடர்ச்சியாக வலைத்தளங்களில் வந்த வசைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல், குழந்தையின் அம்மா தற்கொலை எண்ணங்களால் தூண்டப்பட்டு, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, உயிரை மாய்த்துக்கொண்டார்.

அதன் பிறகும், அந்தப் பெண்ணின் இறப்பை வைத்து பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.இதைத் தொடர்ந்து யு டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த இளம் பெண் ஒருவர், குறிப்பிட்ட தன் பேட்டியை தனது விருப்பம் இல்லாமலே பதிவேற்றிவிட்டார்கள் என்றும், என் காணொளியை பார்க்கும் குடும்பத்தையும், உறவினர்களையும், நண்பர்களையும் எப்படி எதிர்கொள்வேன் என தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

தனது காதலியை சமூக ஊடகங்களில் தவறாக சித்தரித்ததைத் தொடர்ந்து, அந்த ரசிகர் கொடுத்த வரம்பு மீறிய டார்ச்சரில், கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் கூலிப்படை வைத்து கொடூரமாக குறிப்பிட்ட ரசிகரை கொலை செய்த சம்பவமும் மிகச் சமீபத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் வரம்பு மீறிய கருத்துக்களால் தொடரும் இம்மாதிரியான சம்பவங்கள் குறித்து உளவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என அணுகியபோது…

டாக்டர் ராதிகா முருகேசன் மனநல மருத்துவர்

‘‘இந்த சமூகம் எல்லாவற்றையும் தூக்கி பெண் மீது மட்டுமே பாரத்தை ஏற்றுகிறது. ஒரு அம்மாவாக அவரைப் பற்றி, அவரின் மனநிலை பற்றி எதுவும் தெரியாமலே சர்வசாதாரணமாக விமர்சிப்பது தவறானது. குழந்தை உயிருடன் கைகளில் திரும்பக் கிடைக்கும்வரை அந்த தாயின் உயிர் துடிச்சிருக்கும். ஒருவேளை குழந்தை இறந்திருந்தாலும் குற்ற உணர்வில் பாதிக்கப்படுவதும் அம்மாதான்.

குழந்தையை தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்துகொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். குற்ற மனநிலையில் இருக்கும் பெண்ணிடம், முகம் தெரியாதவர்கள் எல்லாம், ‘நீ ஒரு மோசமான தாய்’ என வசைபாடிச் செல்லும்போது மேலும் அதீத குற்ற மனநிலைக்குள் அவர் செல்கிறார். அந்த சூழலைக் கடந்து வருவது சுலபம் இல்லைதான். அந்த இடத்தில் அவருக்கு சரியான சப்போர்ட்டிங் சிஸ்டம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் முகம் தெரியாத உளவியல் நிபுணர்களோடு பேசுவதைவிட, தெரிந்த நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசலாம். அல்லது உடன் பணியாற்றுபவர்கள், உடன் பிறந்தவர்களுடனாவது பேசலாம். சிறந்த நட்பு அல்லது உறவு நம்மோடு உடனிருப்பதே இந்த மாதிரியான விஷயங்களை கடக்க உதவும்.

இரண்டாவதாக நடிகர் தர்ஷன் விஷயம். ஒரு ரசிகன் தன்னை ஏற்றி ஏற்றி உயரத்தில் வைக்கும்போது நடிகராக அவர்கள் அந்த போதைக்கு அடிமையாகி விடுகிறார்கள். திடீரென அதே ரசிகன் தன்னைத் தாக்கும்போது அதை அவர்களால் தாங்க முடிவதில்லை. ‘நான் என்ன செய்தாலும் நீ யாரு இதைச் சொல்ல.

நீ ஒரு ரசிகன் அவ்வளவுதான்’ என்கின்ற மனநிலை இதில் இருக்கிறது. அதேபோல், ரசிக மனநிலைக்கும் எல்லை உண்டு. சினிமாவுக்கு மட்டுமான ரசனையுடன் பார்க்கும் மனநிலை மக்களிடத்தில் சுத்தமாக இல்லை. நடிகர்கள் நடிப்பை ரசிக்கிறோம் அவ்வளவே. அதைத் தாண்டி, அவர்களின் சொந்த வாழ்வில் தலையிட நாம் யார்?

இந்த ரசிகரின் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றே நினைக்கிறேன். இது ஒரு நார்சிசத்தின் வெளிப்பாடு. எமோஷனலாக, ஐடென்டியாக தன்னுடைய அடையாளமாக அந்த நடிகரை அந்த குறிப்பிட்ட ரசிகர் பார்த்திருக்கிறார். அதனால்தான் அந்த நடிகர் செய்கிற செயலை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடிகர் மீது தான் வைத்த அடையாளத்தையே அந்த ரசிகர் உடைக்க நினைத்திருக்கிறார்.இது ஒருவிதமான ஆளுமைக் கோளாறு. ஆளுமைக் கோளாறு உள்ளவர்கள் முகம் காட்டாமலே தாக்குவார்கள். அதனால்தான் குடும்பத்தையே அசிங்கப்படுத்துவது, முகம் தெரியாத பேக் ஐடியில் இருந்துகொண்டு வன்மத்தைக் கொட்டுவது போன்ற சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது.’’

காயத்ரி மஹதி மனநல ஆலோசகர்

‘‘நார்சிசம் எனப்படும் தன் வியப்பு சார்ந்த ஆளுமைக் கோளாறுடன்தான் பெரும்பாலும் இணையத்தில் இயங்குகிறார்கள் என்கிறார் சமூக ஊடகங்கள் குறித்த ஆய்வாளரான ஜெனிஃபர் கோல்பெக் (Jennifer Golbeck). தங்கள் சாடிச மனநிலையை வேறு எங்கும் காட்ட முடியாத நிலையில் சோஷியல் மீடியா வழியாக இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

எதிர்பாராமல் நடந்த ஒரு தவறில் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் தனது கருத்தைப் பதிவு செய்யும்போது, நான் வாழத் தகுதி இல்லாத நபரோ என குறிப்பிட்ட அந்த நபரை சிந்திக்க வைத்துவிடும். வெகு சுலபமாக தங்கள் கருத்துக்களை முகம் தெரியாதவர்களும் பதிவிட்டுச் செல்லும்போது, அந்த நொடி அத்தனை பேருடைய தாக்குதலும் மூளைக்குள் நுழையும்போது, குழந்தை, குடும்பம் என்கிற சிந்தனை மறைந்து தன் பிரயாரிட்டியே பாதிக்கப்பட்டவரின் முன்னால் நிற்கும்.

இதில் பாதிக்கப்பட்டவர்களை மூன்று விதமான உணர்வுகள் ஆட்கொள்ளும். முதலாவது “நீங்க என்னை இப்படி திட்டிட்டீங்களே” என்பதில் சமூகத்தைப் பார்க்கவே பயப்படும் நிலை. சமூகத்தை நினைச்சாலே ஒரு பதட்டம் அவர்களை தொற்றிக் கொள்ளும். அந்த பதட்டத்தில் தனிமையில் தன்னை வைத்துக்கொள்ள நினைப்பது.

இரண்டாவது தாழ்வுமனப்பான்மைக்குள் செல்வது. விளைவு, சமூகத்தில் இருந்து ஒதுங்கி, “நான் ஒரு பொண்ணு இல்லையோ? நான் ஒரு நல்ல அம்மா இல்லையோ? நான் காதலிக்க தகுதியில்லாத நபரோ?” என்றெல்லாம் நினைப்பது. உருவக் கேலிக்கு ஆளாகும் நபர்களுக்கும் இந்த மனநிலை வரும். மூன்றாவதாக உடல் ரீதியான பாதிப்புகளாக வயிற்றுவலி, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாமிட்டிங் சென்ஸ் என அடிக்கடி உடல் உபாதைகளை மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவை அனைத்துமே அவரோடு வீட்டில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு நிதானத்திற்கான மருந்துகளே முதலில் தேவை. இவர்களை முதலில் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று நிதானத்திற்கு கொண்டு வரவேண்டும்.

மேலே குறிப்பிட்ட பெண்ணின் சம்பவத்தில், குழந்தை பிறந்த சிறிதுநாள் என்பதால், அந்தத் தாய் போஸ்ட் பேட்டன் டிஃப்ரஷனில் இருந்திருக்கலாம். அதனால் ஏற்கனவே தற்கொலை எண்ணங்கள் வந்திருக்கலாம். இந்த அதிர்ச்சி சம்பவமும் இணைந்ததில், தன்னைத்திட்டும் குடும்பத்தையும், சமூகத்தையும் சந்திக்க பயப்படும் மனநிலை எனவும் சொல்லலாம்.

இரண்டாவது சம்பவத்தில் வீடியோ வெளியாகி தற்கொலைக்கு முயன்ற பெண் நிகழ்வில், யதார்த்தமாகப் பேசும்போது தன்னை மீறி ஒப்படைக்கும் நிலை. டாக் ஷோக்களில் அந்த நிமிடம் பேசிவிடுவார்கள். ஆனால் வெளியில் வந்தபிறகு பக்கென இருக்கும். இதெல்லாம் ஒரு உந்துதல் மனநிலைதான். அதாவது, உணர்ச்சிவசப்பட்டு பேசும் நிலை. லைம்லைட் குறித்து தெரியாமலே பேசி சிக்கலில் சிக்குவது. குறிப்பிட்ட அந்த பேட்டியில், பேட்டி எடுத்த பெண்ணும், பேட்டி கொடுத்தவரும் ஒரே வயதுள்ள பெண்களாக இருந்திருக்கலாம். அதனால்கூட அந்தப் பெண் கொஞ்சம் ஓப்பனாக பேசியிருக்கலாம். உற்சாகம் ஏற்படும்போது, ரொம்பவே சந்தோஷப்பட்டாலும், ரொம்பவே ஆச்சரியப்பட்டாலும் நிதானமாக இரு என்பது இதனால்தான்.

மூன்றாவதாக கன்னட நடிகர் தர்ஷன் விஷயத்தைப் பொறுத்தவரை, எந்த ஒரு எக்ஸ்டீரிம் செயலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. இது பெரிய அளவில் சைலன்டாக நடைபெற்ற ஒன்று என்றே தோன்றுகிறது. மீடியாவில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், ‘அவ எனக்கான பொண்ணு’ என்கிற ஆண்களின் வேட்டையாடும் குணம் இது எனலாம். அந்த பொசஷிவ்னெஸ்தான் தர்ஷன் விஷயத்தில் நிகழ்ந்துள்ளது.

அதேபோல் பெண்கள் தங்கள் பெர்சனல் விஷயங்கள் எல்லாவற்றையும் சோஷியல் மீடியாவில் கடைவிரிக்கக் கூடாது. ஒரு ஆண் தனக்கு நடந்த துரோகத்தைச் சொல்வதற்கும் பெண் அதைச் சொல்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கிறது. பெண் சொல்வது வலைத்தளங்களில் கேரக்டர் அசாஸினேஷன் செய்யப்படுகிறது. அதுவும் தொடர்புகொள்ள முடியாத இடத்தில் ஒரு பெண் இருந்தால் அவள் மீது மொத்தமாக சேரை அள்ளி வீசுவார்கள்.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related posts

ஆயுர்வேதத் தீர்வு!

IBS அறிவோம்! இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்!

ஞானப்பல்… ஒரு பார்வை!