அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் செப்.25ம் தேதி வரை நீட்டிப்பு..!!

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை டெல்லி ஐகோர்ட் செப்.25 வரை நீட்டித்தது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மாா்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு டெல்லி உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து, திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. கடந்த ஜூலை 12-ம் தேதி அமலாக்கத் துறை வழக்கில், கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில், அவர் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதேநேரத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக் மற்றும் சிலருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ: கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் திணறல்

பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஜம்மு – காஷ்மீரில் நாளை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு