தைகிருத்திகையை முன்னிட்டு திருப்போரூரில் அறுபடை வீடுகளை போற்றும் விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்


சென்னை: தைகிருத்திகையை முன்னிட்டு திருப்போரூரில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் விழா நடைபெற உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தைகிருத்திகை, தைப்பூசம், மகா சிவராத்திரி விழா, அறுபடை வீடு ஆன்மிகப் பயணம், ராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணம் ஆகியவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பேசியதாவது: தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் வகையில் தைகிருத்திகை பெருவிழா செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் திருமண மண்டபத்தில் நாளை மாலை முதல் 20ம் தேதி இரவு வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இங்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் அரங்குகளாக அமைக்கப்படுவதோடு தைகிருத்திகை தினத்தில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. எனவே சமயச் சான்றோர்கள் மற்றும் இறையன்பர்கள் பங்கேற்கின்ற இவ்விழாவினை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும். தைப்பூச விழாவினை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் முருகப் பெருமான் கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளையும், பக்தர்கள் இலகுவாகவும், விரைவாகவும் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகளையும், அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மண்டல இணை ஆணையர்கள் மற்றும் கோயில் செயல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மகா சிவராத்திரி பெருவிழா கடந்தாண்டு வரை 5 கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்தாண்டு கூடுதலாக மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகிய 2 கோயில்களையும் சேர்த்து 7 கோயில்கள் சார்பில் வரும் மார்ச் மாதம் மகா சிவராத்திரி பெருவிழாவினை விமரிசையாகவும், ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்திட உரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட கோயில்களின் செயல் அலுவலர்கள் செய்திட வேண்டும். அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் ஆண்டுக்கு 1,000 மூத்த குடிமக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் முதற்கட்ட பயணம் வருகின்ற ஜனவரி 28 அன்று தொடங்க உள்ள நிலையில் அப்பயணத்திற்கான ஏற்பாடுகள், பக்தர்களுக்கான தங்குமிட வசதிகள், போக்குவரத்து வசதிகள், சிறப்பு தரிசனம் போன்றவை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

மேலும் இந்தாண்டிற்கான ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணத்தில் 300 பக்தர்கள் 5 கட்டங்களாக அழைத்து செல்லப்பட உள்ளனர். முதற்கட்ட பயணம் பிப்ரவரி 1ம் தேதி புறப்படும் நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள், காசியில் பக்தர்கள் தங்குவதற்கும், உணவிற்கும் செய்யப்பட்டுள்ள வசதிகள், பக்தர்களுக்கு உதவியாக செல்லும் அலுவலர் மற்றும் பணியாளர் குழு, மருத்துவக் குழு நியமனம் செய்து பக்தர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்