Friday, June 28, 2024
Home » அருள் பெருக்கும் வாராகி ஆலயங்கள்

அருள் பெருக்கும் வாராகி ஆலயங்கள்

by Kalaivani Saravanan

ஆஷாட நவராத்திரி ஆரம்பம் 18-6-2023

வாராகிக்கு செய்யப்படும் வழிபாடுகளை சப்தமாதர் தொகுதியில் உள்ள வாராகிக்கே செய்துவந்துள்ளனர். தஞ்சைப் பெரியகோயிலில் இப்போதிருக்கும் அன்னை வாராகியும் சப்த மாதர் தொகுப்பில் இருந்தவளே என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும். பின்னாளில் அன்பர்கள் வாராகிக்கு என்று தனிக் கோயில்களை அமைத்துள்ளனர். வடநாட்டில் காசியில் பாதாள வாராகிக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது. ஒரிசாவிலும், வங்காளத்திலும் வாராகிக்கு என்று ஆயிரம் வருஷப் பழமையான கோயில்கள் பல உள்ளது. ஓடிசாவில் மச்சவாராகிக்கு என்று பெரிய ஆலயம் உள்ளது. இது தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகின்றது. நேப்பாளத்தில் வாராகி, பல நிலைகளில் வழிபடப்படுகின்றாள்.

அங்கு அவளுக்குப் பல ஆலயங்கள் உள்ளன. தென்னாட்டில் உள்ள ஆலயங்கள் சிலவற்றை அறிந்து மகிழலாம். மாமன்னன் ராஜராஜனால் கட்டப்பட்ட திருக்கோயில், தஞ்சைப் பெரிய கோயில். இந்தக் கோயில் தெற்குப் பிராகாரத்தில் வாராகி அம்மன் சந்நதி உள்ளது. இது புகழ் பெற்ற வாராகி சந்நதியாகும். இங்கு செய்யப்படும் அபிஷேக அலங்காரங்கள் தனிச் சிறப்புமிக்கதாகும். பெருமளவு அன்பர்கள் இங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்துவருகின்றனர்.

(இந்த அம்பிகை இக்கோயிலில் இருந்த சப்தமாதர்களில் ஒருத்தியாக இருந்தாள் என்றும் பின்னாளில் முகலாயப் படையெடுப்பால் அந்த சந்நதி அழிக்கப்பட்ட போதிலும் வாராகி தேவி மட்டும் நிலைபெற்றாள் என்றும் அவளது சந்நதியே இப்போது சிறப்பாக உள்ளதென்பர்)

கச்சி வாராகி

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் கருவறைக்கு இடதுபுறம், வாராகி சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாட்களிலும் வேண்டுதல் பேரிலும் இவளுக்குச் சிறப்பான அபிஷேக அலங்கார அமுதுபடையல்கள் நடைபெறுகின்றன. இவளுக்கு எதிரில், சந்தான ஸ்தம்பம் என்னும் தூண் உள்ளது. அதை வலம் வருபவர்கள் புத்திரப்பேற்றை அடைந்து இன்பமாக வாழ்வர் என்பது நம்பிக்கையாகும்.

பள்ளூர் வாராகி

காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பள்ளூர் கிராமம். இங்குள்ள வாராகி தேவி அரசாளி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இவள் பொங்கி வந்த ஆற்று வெள்ளத்தில் வந்ததாகக் கூறுவர். ஆதியில் இங்கு மந்திர காளியம்மன் என்பவள் கிராமதேவியாக இருந்தாள். ஒரு சமயம் இங்கு வந்த மலையாள மந்திரவாதி ஒருவன், இங்குள்ள கிராமதேவதையான மந்திர காளியம்மனை மந்திரங்களால் கட்டி வைத்துக் கோயிலையும் பூட்டிவிட்டு பலவிதமான அட்டகாசங்களைச் செய்து வந்தான்.

அவனால் மக்கள் பெருந்துன்பம் அடைந்தனர். ஒரு சமயம், ஆற்றில் அலைமீது வந்த வாராகியம்மன் இத்தலத்தில் கரை ஒதுங்கினாள். அவள் நடு இரவில் சென்று காளி யிடம் கதவைத் திறந்து விடுமாறு கூறினாள். அதற்கு காளிதேவி தன்னை மந்திவாதி மந்திரக் கட்டுக்களால் கட்டுப்படுத்தி, கோயிலைப் பூட்டி வைத்திருப்பதாகவும் அவனைத் தன்னால் மீற முடியவில்லை என்றும் கூறினாள். அதைக் கேட்ட வாராகி கோபித்து மந்திரக் கட்டுக்களை அழித்து கோயில் கதவைத் திறந்தாள். காளிதேவி அவளை வணங்கினாள். நடப்பதை அறிந்த மந்திரவாதி, விரைந்து அவ்விடம் வந்தான்.

கோபம் கொண்ட அவன் வாராகியையும் தன் மந்திரத்தால் கட்ட முயற்சி செய்தான். வாராகி கண நேரத்தில் அவனைப் பிடித்து கீழே தள்ளி மிதித்தாள். பிறகு இரண்டாகக் கிழித்து எறிந்தாள். காளி தேவி வாராகியிடம், “நீயே இங்கு கோயில் கொள்வாய். நான் எதிரேயுள்ள வேப்பமரத்தடியில் இருந்து கொள்கிறேன்’’ என்று கூறிவிட்டு அவ்விடம் சென்று கோயில் கொண்டாள். அவளையே மந்திர மாகாளி என்று போற்றுகின்றனர்.

கருவறையில் இருக்கும் வாராகி அரசாளி என்னும், காளிதேவியின் பெயரைத் தனதாக்கிக் கொண்டாள். கருவறையில் சங்கு, சக்கரம் ஏந்தி (மேற்கரங்களில்) முன் கரங்களில் அபய வரத முத்திரைகளைத் தாங்கி சுகாசனத்தில் வீற்றிருக்கின்றாள். பீடத்தில் சப்தமாதர்களில் (வாராகியை விடுத்து) மற்றைய அறுவரும் புடைப்புச் சிற்பங்களாக எழுந்தருளியுள்ளனர். இங்கு இரண்டு வாராகி வடிவங்கள் உள்ளன. பெரிய வடிவம் அரசாலை அம்மன் என்றும், சிறியது ஆதிவாராகி என்றும் அழைக்கப்படுகின்றன. அரசுகாத்த நாயகி, அரசாலை, அரசு நிலையிட்ட நாயகி என்ற பெயர்களில் வாராகி வழிபடப்படுகின்றாள்.

இங்கு பிள்ளைப்பேறு வேண்டி அன்பர்கள் தலமரமான வில்வமரத்தில் தொட்டில் கட்டுகின்றனர். இப்படிச் செய்து பயன் பெற்று பிள்ளைப்பேறு அடைந்தோர் பலராவர். இத்தலத்தில் வாராகி தேரில் பவனி வந்து அருள்பாலிக்கின்றாள். பழைய தேர் பழுதாகிவிட்டதால் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.

மயிலை வாராகி

சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் தெருவில் சிறிய அளவிலான பச்சையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அன்பர் கணபதி சுப்பிரமணியம் அவர்கள் வாராகி அம்மனை எழுந்தருளச்செய்து வழிபாடு களைச் செய்து வருகின்றார். பெருமளவு அன்பர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

வராக நதிக்கரை காஞ்சி வாராகி

திண்டிவனம் – திருவண்ணாமலை சாலையில் உள்ள நகரம் செஞ்சியாகும். செஞ்சி என்பதற்கு உயர்ந்தது என்பது பொருள். இங்கே ஆனந்தக்கோனார் என்பவர் முக்கோணமாக உள்ள ராஜகிரி, கிருஷ்ணகிரி, சங்கிலி துர்க்கம் ஆகிய மூன்று மலைகளை இணைந்து கோட்டை மதில் சுவர் எழுப்பி, மலை உச்சிகளிலும் சமதரையிலும் உயர்ந்த கட்டிடங்களைக் கட்டியுள்ளார். இது மிகுந்த பாதுகாப்பான கோட்டையாக இருந்து வந்துள்ளது. இப்போது இது இங்கு வாழ்ந்த மராட்டிய மன்னன் வழித் தோன்றலான தேசிங்கு என்பவன் பெயரால், தேசிங்குராஜன் கோட்டை எனப்படுகிறது.

மத்திய தொல்லியல் துறையால் சிறப்புடன் பராமரிக்கப்படும் இக்கோட்டையானது, வலிமையும் பெருமையும் உடையதாகும். செஞ்சிக் கோட்டையின் வடக்கில் உள்ள மலை சிங்கவரம் மலை எனப்படுகிறது. சிங்கபுரம் என்னும் ஊரை ஒட்டி இருப்பதால் இது சிங்கபுரம் மலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது.
இதில் திருமால் அரங்கநாதராக சயன கோலத்தில், அரவணையில் பள்ளி கொண்டவண்ணம் காட்சியளிக்கின்றார். இவரைச் சிங்கபுரம் ரங்கநாதர் என்பர். கல்வெட்டுக்களில் சிங்கபுரத்து மலை பன்றிமலை என்றும், அதிலுள்ள குகைக் கோயிலில் பள்ளிகொண்டுள்ள அரங்கநாதர் பன்றிமலை ஆழ்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

பன்றி மலையில் உற்பத்தியாகும் சிற்றாறு, பன்றியாறு என்று தமிழிலும், `வராகநதி’ என்று வடமொழியிலும் அழைக்கப் படுகின்றது. இது செஞ்சி, வீடூர், திருவக்கரை, மயிலம் வழியாகச் சென்று பாண்டிச்சேரி கடலோடு கலக்கிறது. இதனை சங்கராபரணியாறு என்றும் அழைக்கின்றனர். இந்த ஆறு, வடக்கு நோக்கி உத்திர வாகினியாகச் செல்லுமிடத்தில் திருக்காஞ்சி என்றும் ஊர் உள்ளது. திருமால், வராக அவதாரத்துடன் பூஜித்ததாலும், வராகநதிக் கரையில் இருப்பதாலும், இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமான், `திருக்காஞ்சி வராக நதீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். காசியைப் போலவே போற்றப்படும் தலம்.

காசியிலும் வீசும் அதிமான தலம் என்பர். இங்குள்ள ஆலயத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சியம்மனும் சந்நதி கொண்டுள்ளனர். திருமால் பூவராக சுவாமியும், வாராகி தேவியும் கோயில் கொண்டுள்ளனர். வராகநதிக்கரை ஓரம் வராகசுவாமியின் அம்சம் பெற்ற ஆதிவாராகி இங்கு கோயில் கொண்டிருப்பது சிறப்புடன் சொல்லப்பட்டுள்ளது. இது வராகி தேவிக்குரிய தலங்களில் ஒன்றாக உள்ளது.காஞ்சியிலும், காசியிலும் உள்ள வாராகி தேவியரைத் தரிசிப்பதால் உண்டாகும் பலன் இந்த திருக்காஞ்சி வாராகியை தரிசித்தால் உடனே கிடைக்கும்.  எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள், சொல் எடுபடாமை அதிகாரம் செலுத்துவதில் உள்ள குறைபாடுகள் நீங்கி, நாளும் நன்மை உண்டாகும்.

வாராகி வழிபாட்டில் மலர்கள்

வாராகி மலைகளின் தலைவி, அதனால் மலைகளில் மலரும் குறிஞ்சி மலர்கள் முதலான எல்லா மலர்களையும் சூடி மகிழ்கிறாள். அதனால் அனைத்து மலர்களுமே அவளுடைய வழிபாட்டிற்கு உரியதாகும். என்றாலும் தாமரை, அல்லி, செம்பருத்தி, அலரி போன்ற மலர்களைக் கொண்டு வழிபாடு செய்கின்றனர். வெற்றிலை வேண்டுவோர் செவ்வரளி, செம்பருத்தி, செம்மையான விருட்சி, மாதுளம் பூக்கள் போன்றவற்றைத் தொடுத்து அணிவித்து வழிபடுகின்றனர்.

அமைதியையும் மனமகிழ்ச்சியையும் வேண்டுவோர் நந்தியாவர்த்தம், பவழமல்லி, முல்லை, மல்லிகை போன்ற வெண்மலர்களைச் சூட்டி, அம்மலர்களால் வழிபாடு செய்கின்றனர். வளமான வாழ்வை வேண்டும் அன்பர்கள் அறுகம்புல், மரு, பவளம், மனோரஞ்சிதம் போன்ற பசுமையான மலர்கள் இவைகள் கொண்டு மாலை தொடுத்து அணிவித்து வழிபடுகின்றனர். அவற்றைக் கொண்டே அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

பெருத்த செல்வம் வேண்டுவோர் செவ்வந்தி, கொன்றை சாமந்தி மஞ்சள் நிற விருட்சி மலர்களால் தொடுத்த மாலைகளை அணிவித்து அவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.பகையை வெல்லக் கள்ளிப்பூக்கள், தாழைமலர், பொற்றாமரை மலர்கள் இதழ்களைக் கொண்டு வழிபடுகின்றனர். தாழம் பூ இடியாமல் மலரும் பூ என்பர். மேலும், விரலி மஞ்சளைக் கொண்டு தொடுத்த மாலையையும் அணிவிக்கின்றனர்.

சந்தான வாராகி

வாழ்வில் மானுடம் அடையும்பேறுகளில் பிள்ளைப்பேறே உயர்ந்ததாகும். அது வம்சத்தைத் தொடரச் செய்கின்றது. நல்ல குழந்தைகளாலேயே சமுதாயம் சிறப்படைகின்றது. மக்களுக்கு குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களில் வாராகியும் ஒருத்தியாவாள். இவளைச் சந்தான வாராகி என்கின்றனர். இவர் மூன்று அல்லது நான்கு குழந்தைகளுடன் இருக்கின்றாள் என்பர். பன்றி பதினாறு குட்டி போடும் என்பது பழமொழியாகும்.

திருவிளையாடல் புராணத்தில் இறைவன் பெண் பன்றியாக வந்து தாயை இழந்த பன்னிரண்டு குட்டிகளுக்குப் பாலூட்டிச் சீராட்டி அவர்களைப் பாண்டியனுக்கு மந்திரியாக்கிய வரலாற்றைக் காண்கிறோம். இவ்வகையில் பன்றி முகப் பாவையான வாராகியின் அருளால் நிறைய குழந்தைகள் பிறந்து வம்சம் பல்கிப் பெருகும் என்று நம்புகின்றனர். மச்சவாராகி என்னும் வாராகி மடியில் குழந்தையோடு இருக்கும் சிற்பம் ஒன்று கிடைத்துள்ளது. இதிலுள்ள குழந்தையின் தலை உடைபட்டுள்ளது.

வாராகி அம்மன் சந்நதியில் பிள்ளைப்பேறு வேண்டித் தொட்டில் கட்டுகின்றனர். பள்ளூர் வாராகி சந்நதியில் உள்ள வில்வ மரத்தில் கட்டப்பட்டுள்ள ஏராளமான தொட்டில்களைக் காண்கிறோம். இப்படிச் செய்வதன் மூலம் வாராகியின் அருளால் பிள்ளைப் பேறு வாய்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். மக்களுக்குக் குழந்தை தரும் தேவியாக இருப்பவள் சஷ்டி தேவி. அவளருளால் பிறந்த குழந்தைகள் புஷ்டியாக வளர அறிவு விருத்தியாக வாராகி அருள்புரிகின்றாள். குழந்தைகளுடன் இருக்கும் சந்தான லட்சுமியைப் போல சந்தான வாராகியும் குழந்தைகளுடன் காட்சி தருகிறாள்.

குழந்தைகளைக் கொஞ்சி மகிழும் கோலத்தில் பாடப்பட்ட நூல்கள் பிள்ளைத் தமிழ் நூலாகும். பிள்ளைத் தமிழ் நூல்களில் முதலில் இடம் பெறுவது காப்புப் பருவமாகும். இதில் பாட்டுடைத் தலைவனான குழந்தையைக் காக்கும்படி பல்வேறு தெய்வங்களிடம் வேண்டுகின்றனர். அப்படி வேண்டப்படும் தெய்வங்களில் ஒன்றாக சப்தமாதர் கூட்டமும் இடம் பெறுகின்றது. இதில் இடம் பெறும் ஏழு தேவியர்களின் பெயரையும், பெருமையையும், ஆற்றலையும் விவரித்து அவர்களிடம் தமது குழந்தையைக் காக்கும்படி வேண்டுவர்.

இப்பெண்களில் ஐந்தாமவளாக இருக்கின்றாள். வடநாட்டு வழிபாட்டில் இந்த ஏழு பெண்களும் தம் மடியில் குழந்தைகள் வைத்திருப்பவராகக் காட்டப்படுகின்றனர். இவ்வரிசையில் வரும் வாராகியும் மடிமீது குழந்தையுடன் இருக்கின்றாள். குழந்தையைக் காக்கும் தெய்வமாக சப்தமாதர் கூட்டத்தில் ஒருத்தியாகவும், தனிப்பெரும் தெய்வமாகவும் வாராகி இருக்கிறாள். சந்தான வாராகி நிறைய குழந்தைகளைத் தருவதோடு அவர்களை அறிவில் மிக்கவராகவும் செய்கின்றாள்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

You may also like

Leave a Comment

seventeen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi