அருள் புரியும் ஆதி லட்சுமி நாராயண பெருமாள்

கடலூர் வட்டம், நல்லாத்தூரில் ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீலட்சுமி நாராயண வரதராஜப் பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஊரின் முற்காலப் பெயரான சுவர்ணபுரி மருவி நல்லாத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்து கோயிலாகும். 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள எம்பெருமாளை ருத்ரன், பிரம்மா, இந்திரன் ஆகியோர் சேவித்து சென்றிருப்பதாக பிரம்மா கூறிய தியான சுலோகம் சொல்கிறது. 108 திவ்ய தேசங்களில் நடுநாட்டில் உள்ள திருவஹிந்திரபுரம், தேவநாத சுவாமிகளின் திருக்கோயிலுக்கு அபிமான ஸ்தலமான இக்கோயில், தென் பெண்ணை – யாற்றுக்கும், சங்கராபரணி ஆற்றுக்கும் இடையே கம்பீரமாக அமைந்துள்ளது.

சிங்கிரி கோயில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கிலும், பூவரசன் குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மேற்கிலும் அமைந்து, இத்தலத்தை மேலும் சிறப்பிக்கிறது. கோயிலின் முன்புறமும், பக்கவாட்டிலும் அழகிய நந்தவனம் பூத்துக் குலுங்குகிறது. நுழைவாயில் சுதை வேலைப்பாடுடனும், ராஜகோபுரம் மூன்று கலசங்களுடனும் காணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பலிபீடத்துடன் கூடிய துவஜஸ்தம்பம் மிக அழகாக, கம்பீரமாக நிற்கிறது. கர்ப்ப கிரகத்தில் சித்ர வேலைகளுடன் கூடிய மூன்றுதள விமானம் காணப்படுகிறது.

மஹா மண்டபத்தில் துவார பாலகர்களை அடுத்து, எம்பெருமான் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராய் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமானின் முகத்தில் பொங்கும் அருளையும், உதட்டின் ஓரமாய் பூக்கும் புன்சிரிப்பையும் காண கண் கோடி வேண்டும். பிருகு முனிவரின் மகளாக அவதரித்த ஸ்ரீதேவியை, வரதராஜப் பெருமாள் மணந்ததாக ஐதீகம்.  ஸ்ரீவரதராஜப் பெருமாள் சந்நதியில், பிரதான மூலவர் ஆதி லட்சுமி நாராயண பெருமாள் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

அருகில் திருமங்கையாழ்வாரும், வேதாந்த தேசிகரும் சேவை சாதிக்கின்றனர். இக்கோயிலின் மகாமண்டப இடது புறத்தில், ஸ்ரீராமபிரான், சீதாப்பிராட்டியோடு காட்சியருள, அருகில் ஆஞ்சநேயர் தலைதாழ்த்தி, வாய் பொத்தி வினயமாய் தோன்றுகிறார். பெருமாளின் நேர் எதிரே பெரிய திருவடியாம் கருடாழ்வார் சந்நதி உள்ளது. தாயாரின் திருநாமம், பெருந்தேவித் தாயார். பெருமாளை மணந்த சந்தோஷத்தில் சிரித்தபடி அருள்பாலிக்கிறார்.

மங்களகரமாக, சக்தியுடன் விளங்கும் இந்தத் தாயாருக்கு தவறாமல் விளக்கேற்றி வழிபடும் பெண்களுக்கு குறைகள் நீங்கி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நிச்சயம்.
ஸ்ரீபெருந்தேவி தாயாருக்கு பிரதி வெள்ளி தோறும் திருமஞ்சனமும், மாலையில் அர்ச்சனையும் நடைபெறுகின்றன. போகிப் பண்டிகை அன்று ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த உற்சவத்தில் முகூர்த்த மாலை பெற்றுச் செல்பவர்களுக்கு, விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.

இங்கு கருடாழ்வாரை தினமும் எட்டு முறை பிரதட்சணம் செய்தால், பக்தர்களுக்கு சிறந்த கல்வியும், செழிப்பும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உறுதி. திருக்கோயிலின் வடக்கே ஸ்ரீவிஷ்ணு துர்க்கை சந்நதி உள்ளது. கிழக்கே ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயருக்கு கார்த்திகை மாதம் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் திருமஞ்சனத்துடன் வடை மாலை சேவையும், மார்கழி மாதம் ஸ்ரீஅனுமன் ஜெயந்தியும் வெகு விமரிசையாக நடைபெறும்.

புதுச்சேரியிலிருந்தும் விழுப்புரம் மற்றும் கடலூரிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. புதுச்சேரி – கடலூர் வழியில் தவள குப்பத்தில் இருந்து 7 கிலோ மீட்டர். புதுச்சேரி – விழுப்புரம் வழியில் அரியூரிலிருந்து 3 கிலோ மீட்டர்.

Related posts

சாபங்களும் தோஷங்களும் ஏன்?

நிறம் மாறும் அதிசய லிங்கம்

கவச அத்தியாயங்கள்..!