கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் அதிமுக, பாஜவின் நிலை என்ன?: முத்தரசன் கேள்வி

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் அதிமுக, பாஜவின் நிலை என்ன என்று முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பலவற்றை நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசு, தற்போது முத்திரை பதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கின்றது.

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் உட்பட தகுதி வாய்ந்த ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் தாய்மார்களும், சகோதரிகளும் பயன் அடைகின்றனர். பொருளாதார நெருக்கடிகள், ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தான் கொடுத்திட்ட வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என்கிற மன உறுதியுடன் நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகின்றோம். தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இத்திட்டத்தை வரவேற்கிறதா? அல்லது எதிர்க்கின்றதா என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதே போன்று ஒன்றியத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜ இத்திட்டம் குறித்து தனது நிலை என்னவென்பதனையும் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

விசிக பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: ஆட்டோ டிரைவர் கைது