நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கலைஞரின் வேலை வாய்ப்பு திட்டம் சிறப்பு

* திருத்துறைப்பூண்டி நகராட்சி குளம், வாய்க்கால் சீரமைப்பு

* கூட்டாக மக்கள் பணி செய்வதால் ஒற்றுமை நிலவுகிறது

திருத்துறைப்பூண்டி : நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கலைஞரின் வேலை வாய்ப்பு திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் திருத்துறைப்பூண்டி நகராட்சி குளம், வாய்க்கால் சீரமைக்கப்படுகிறது. கூட்டாக மக்கள் பணி செய்வதால் ஒற்றுமை நிலவுகிறது.தமிழகத்தில் மொத்தம் 152 நகராட்சிகள் உள்ளது. இதில் நகர்ப்புறஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில, நகரை அழகுபடுத்தவும், சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கத்தில்,7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகளில் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தஞ்சாவூர் மண்டலத்தில் திருத்துறைப்பூண்டி நகராட்சி தேர்வு செய்யப்பட்டு ஆண்கள், பெண்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் முயற்சியால் கலைஞர் நகர்ப்புறவேலை வாய்ப்புத் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

2021-22ம் ஆண்டில் 23 எண்ணிக்கையிலான குளம், வாய்க்கால்கள் மனித சக்தியை கொண்டு தூர்வார ரூ.150 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 45 ஆயிரம் வேலை நாட்களுக்கு பணி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் தற்போது 85 சதவீதம் முடிவுற்றது. 40 ஆயிரம் வேலை நாட்களில் (ஆண்கள்-32 ஆயிரம், பெண்கள்-8 ஆயிரம்) சுமார் 2000 மேற்பட்ட பணியாளர்களை பயன்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதம் முடிக்க வேண்டிய பணிகளும் தீபாவளிக்கு முன் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2022-2023ம் ஆண்டு சுமார் 36 ஆயிரம் வேலை நாட்கள் மனித சக்தியை கொண்டு எஞ்சியுள்ள குளம், கடந்த ஆண்டில் தூர்வாரப்பட்ட குளங்களில் முள்வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.142 லட்சம் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நகரில் வாழும் சுமார் 2000-க்கு அதிகமானோர் வேலைவாய்ப்பு கிடைக்க பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்து சமூக ஆர்வலர் பாலம் செந்தில்குமார் கூறுகையில், 100 நாள் பணி என்பது ஊராட்சிகளில் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், திமுக ஆட்சியில் நகர்புறங்களில் வசிக்கும் ஏழை குடும்பங்களின் வறுமை நிலையை போக்கும் வண்ணம் கலைஞர் நகர்ப்புறவேலைவாய்ப்புத் திட்டம் கொண்டு வந்துள்ளது மிகச்சிறப்பு.

குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ செலவினங்களுக்கு கடன் வாங்கியும், தவணையிலும் நுண்கடன் நிறுவனங்கள் மூலம் பணம் பெற்று திரும்ப செலுத்த மிகவும் சிரமப்பட்டனர். இந்த தி்ட்டத்தால் கடன் சுமை கொஞ்சம் குறைந்துள்ளது. மூன்று வேளை உணவு கிடைக்கிறது.ஒரே இடத்தில் கூட்டாக பணி செய்வதால் ஒற்றுமை உணர்வும் ஏற்பட்டுள்ளது என்றார்.

Related posts

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!