கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் சாலையோரம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: நாமக்கல்லில் அமைச்சர் எ.வ வேலு தகவல்

நாமக்கல்: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் சாலையோரம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.92.31 கோடி மதிப்பில், சட்டக்கல்லூரி மற்றும் மாணவ, மாணவிகள் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாமக்கல்லில் 15 ஏக்கரில், நவீன வசதிகளுடன் அரசு சட்டக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அடுத்தாண்டு மே மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு பணிகளை, மழைக் காலத்தில் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் ஒரு மரத்திற்கு பதில், 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. மேலும், நர்சரிகளில் கிடைக்கும் ஒரு அடி உயர மரக்கன்றுகளுக்கு பதிலாக, குறைந்த பட்சம் 5 அடி உயரம் கொண்ட மரக்கன்றுகளை நடவு செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

ஈரோடு அருகே கைத்தறி சேலை விற்பனை கடையில் 25 சவரன் நகை கொள்ளை!!

தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்

சென்னையில் ஒரு வாரத்தில் குட்கா விற்ற 30 பேர் கைது..!!