கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு: சபாநாயகர் வழங்கினார்

காஞ்சிபுரம்: கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் மாணவ, மாணவியர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கினார். காஞ்சிபுரம் பச்சையப்பன் மற்றும் ஆந்தரசன் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டார். அப்போது, கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான பல்வேறு பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் சட்டப்பேரவை தலைவர் பேசியதாவது:- உங்களுக்கும் எனக்கும் ஒரு உறவு உண்டு. எனது பணியை ஆசிரியர் பணியில் இருந்து தொடங்கினேன். அண்ணா பிறந்த இந்த மண்ணில் இருந்து பேசுவதில் நான் பெருமை கொள்கிறேன். அவரது மதியின் நுட்பத்தை கண்டு அமெரிக்கா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. ஒரு காலத்தில் உயர் உறுப்பினர் மட்டும் கல்வியை கற்க முடியும் என்ற நிலையை மாற்றி பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் நமக்கு பாடுபட்டு கல்வியை பெற்றுத் தந்தனர். இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்கள் 34 சதவீதம் என்றால், தமிழகத்தில் 54 சதவீதம்.

இதற்கு நமது தலைவர்கள் தான் காரணம். கலைஞருக்கு பிறகு நம்முடைய தமிழக முதல்வர் உழைக்கின்ற பெண்களுக்கு அந்தஸ்து வழங்கக் கூடிய வகையில் இலவச பேருந்து, கலைஞர் உரிமைத்தொகை போன்ற நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எல்லா சமூகமும் படிக்க வேண்டும் என்ற நிலையை திராவிட இயக்கங்கள் தான் கொண்டு வந்து, அதை நடைமுறைப்படுத்தியது. இன்று பல்வேறு துறைகளில் பெண்களும் ஆண்களும் படித்து பட்டம் பெற்று இந்தியாவிலேயே தமிழகம் முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில் பெங்களூரில் தான் மென்பொருள் நிறுவனங்கள் இருந்தன. அதை கலைஞர் 1996-ல் மாற்றி தகவல் தொழில்நுட்பத்துறை, டைட்டல் பார்க் மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கினார்.

இதைத்தொடர்ந்து சிறுசேரி தகவல் நுட்பப் பூங்கா அமைத்தார். இதன் மூலம் 2 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டனர். ஆகவே தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து செயலாற்றுகிறது என்பதை மாணவர்கள் உணர்ந்து படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கலெக்டர் கலைச்செல்வி மோகன், செல்வம் எம்பி, உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், சட்டப்பேரவை செயலர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மேயர் மகாலட்சுமி யுவராஜ், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை