மதுரையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் “டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்” கீழ் 86 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்” என அறிவித்தார்.

அதன்படி, மதுரையில் முதற்கட்டமாக கிரிக்கெட், கையுந்துப் பந்து, எறிபந்து, கால்பந்து, டென்னிக்காய்ட், ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபாடி, இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள், உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் டி ஷர்ட், விசில், கோன்ஸ், தொப்பி ஆகிய 33 உபகரணங்களின் தொகுப்பை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட விளையாட்டரங்கில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் 5.5.00 கோடி மதிப்பீட்டில் இதற்கான உபகரணங்களுடன் கட்டப்பட்ட கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இம்மையத்தில் விளையாட்டு வீரர்கள் விளையாட்டு தொடர்பான காயங்களிலிருந்து மீண்டு தொழில் முறையில் தங்களது உடற்தகுதியை மீட்டு எடுக்க இயலும். மேலும், இம்மையத்தின் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு தீவிரமான தொடர்அறிவியல் பூர்வ பயிற்சி அளிக்கப்படும். இந்த விளையாட்டு அறிவியல் மையம் கட்டமைப்பில் உள்ள வசதிகள் தரைத்தளத்தில் பிசியோதெரபி கூடம், மருத்துவ அறை, பரிசோதனை கூடம். அறிவியல் அறிஞர் அறை, அலுவலக அறை.

முதல் தளத்தில் – பயிற்சி முறைகள் அறை, கூட்ட அரங்கம், முக்கிய பிரமுகர்கள் அறை. உணவகம், உடலியல் அறை, உடலியல் & உயிரியல் இயக்கவியல் அறை நிறுவப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
“மதுரை மண்ணில் இந்த அற்புதமான திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க தொடங்கி வைப்பது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். டாக்டர் கலைஞருடைய நூற்றாண்டினை சிறப்பித்திடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 12620 கிராம ஊராட்சிகளுக்கும் 86 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்க இருக்கின்றோம். கலைஞருடைய நூற்றாண்டில் அவர் பெயரிலேயே திட்டத்தை துவங்கி வைப்பதில் பெருமை அடைகின்றோம். மகிழ்ச்சி அடைகின்றோம். தமிழ்நாட்டில் விளையாட்டு துறை என்பது நகரம் முதல் கிராமம் வரை எல்லா இடத்திலும் பறந்து விரிந்து இருக்கனும்னு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். கிராமப்புற விளையாட்டு திறமையாளர்களை கண்டறிய தான் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை சென்ற வருடம் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தோம். 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் அதில் கலந்து கொண்டார்கள். ஏழை எளிய கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு உதவ தான் தமிழ்நாடு சாம்பியன்ஙஸ் அறக்கட்டளை தொடங்கி பல உதவிகளை செய்து வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்க இருக்கின்றோம். படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் இந்த ஒவ்வொரு ஊராட்சிக்கும் இந்த திட்டம் போய் சேர இருக்கின்றது. இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி கிராமங்கள் இருக்கக்கூடிய இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் புத்துணர்ச்சியோடும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். முத்தமிழறிஞர் கலைஞருடைய பெயரால் எத்தனையோ திட்டங்கள் இருந்தாலும், நம்முடைய விளையாட்டுத் துறை சார்பாக முதல்முறையாக கலைஞர் பெயரால் விளையாட்டுத் துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன். மகிழ்ச்சி அடைகின்றேன்.

கலைஞர் அவர்களுக்கு அரசியல்வாதி, இலக்கியவாதி, பேச்சாளர், எழுத்தாளர் என பல முகங்கள் உண்டு. ஆனால் விளையாட்டுக்கும் கலைஞருக்கும் என்ன தொடர்பு. ஏன் அவருடைய பெயரை இத்திட்டத்திற்கு வைத்து உள்ளீர்கள் என சில பேர் கருதலாம். கலைஞர் அவர்கள் தன்னுடைய சிறு வயதிலேயே களத்தில் இறங்கி எல்லா விளையாட்டையும் விளையாடியவர். அதன் பிறகு தான் அரசியலுக்கு வந்து ஆடுகளத்தில் நுழையாமல் தவிர்த்து வந்தார். ஆனால் கலைஞர் அவர்கள் ஒரு ஆர்வமிக்க விளையாட்டு போட்டிகளுடைய ரசிகர். அது கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி. கால்பந்து போட்டியாக இருந்தாலும் சரி. அனைத்து போட்டிகளையும் நெருக்கடியான நேரத்திலும் அந்த போட்டிகளை தொலைகாட்சியில் பார்த்து ரசிபவர் தான் டாக்டர் கலைஞர் அவர்கள். ஆனால் அதையெல்லாம் விட அவருடைய பெயரை இத்திட்டத்திற்கு சூட்டியதன் காரணம். ஒரு விளையாட்டு வீரருக்கு இருக்கு வேண்டிய அத்தனை குணங்களும் திறமைகளும் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அது தான் அவருடைய சிறப்பு.

ஒரு விளையாட்டு வீரருக்கு என்னென்ன திறமைகள் வேண்டும். நல்ல எனர்ஜி வேணும். புத்துணர்ச்சி வேணும். நல்ல கூர்மையான அறிவுத்திறன் வேண்டும். தோல்வியிலும் துவண்டு விடாத மன திடம் வேண்டும். இதைவிட முக்கியம் நல்ல டீம் ஒர்க் வேணும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த திறமைகள் அனைத்தும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரிடம் இருந்தது. கலைஞருடைய எனர்ஜிக்கு நிகரான எனர்ஜியை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வசதிகள் ஏதும் இல்லாத அந்த காலத்திலேயே தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் சென்று கழகத்தை வளர்த்தவர் தான் டாக்டர் கலைஞர் அவர்கள். ஒரே நேரத்தில் அரசியலிலும், சினிமாவிலும், இலக்கியத்திலும் கொடிக்கட்டி பறந்து இருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். கலைஞர் அவர்களுக்கு உள்ள எனர்ஜி ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்க வேண்டும். ஓயாமல் பயிற்சி எடுக்க வேண்டும். சோர்வு என்பதே கூடாது. கடுமையான முறையான பயிற்சிதான் ஒரு விளையாட்டு வீரனை வெற்றி வீரன் ஆக்கும்.

அடுத்து கலைஞர் அவர்களுக்கு இருக்கக் கூடிய கூர்மையான அறிவுத்திறன் என்பது மிக ஆச்சிரியமான விஷயம். தான் என்ன செய்ய போகிறோம். அதற்கு பதிலாக எதிரில் இருப்பவர் என்ன சொல்ல போகிறார்கள். அதற்கு என்ன பதில் சொல்லலாம். அதற்கு முன்கூட்டியே யோசித்து செயல்பட கூடியவர் தான் டாக்டர் கலைஞர் அவர்கள். ஒரு விளையாட்டு வீரருக்கும் அந்த திறமை தேவை. நாம் இப்படி விளையாடினால் நம்முடைய எதிர் அணியினர் எப்படி விளையாடுவார் என்று கணிக்க வேண்டும். அடுத்து கலைஞருடைய மன திடம். தோல்வியாக இருந்தாலும் சரி. வெற்றியாக இருந்தாலும் சரி.

இரண்டையுமே சரிசமமாக பார்க்கக் கூடியவர் தான் டாக்டர் கலைஞர். தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயமாக நம்மை தேடி வரும். என்ற மனதிடத்துடன் கடைசி வரை கலைஞர் அவர்கள் மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருந்தார். அதே போன்ற மன உறுதி இங்கே வந்திருக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்க வேண்டும். கடைசியாக கலைஞருடைய டீம் வொர்க். கூட்டு முயற்சி. கலைஞர் அவர்கள் மாதிரி டீம் வொர்க் செய்த மாதிரி வேறொரு நபரை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது. கலைஞர் அவர்கள் மாதிரியே நூற்றாண்டை காணக் கூடிய அவருடைய நெருங்கிய நண்பர் இனமான பேராசிரியர். அவரை மாதிரி எண்ணற்ற போராளிகள், பேச்சாளர்கள். எழுத்தாளர்கள், களப்பணியாளர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என கலைஞர் அவர்களிடம் ஒரு பெரிய டீம் இருந்தது. அதனை கலைஞர் அவர்கள் மிக நேர்த்தியாக வழி நடத்தினார்.

கலைஞருக்கு பின்னர் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அந்த டீமை இப்பொழுது சிறப்பாக வழி நடத்தி கொண்டிருக்கிறார். அதே மாதிரி தான் விளையாட்டிலும் நல்ல டீமை நீங்கள் உருவாக்கி கொள்ள வேண்டும்.நல்ல டீம் அமைந்து விட்டாலே. பாதி வெற்றி பெற்று விட்டோம் என்று அர்த்தம். கலைஞருடைய பெயரால் வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்களை பெறக்கூடிய இளைஞர்களே நான் கேட்டுக் கொள்வதெல்லாம். கலைஞர் அவர்களுக்கு இருந்த குணங்களை, அந்த திறமைகளை நீங்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது இங்கு வழங்கக்கூடிய விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி நம் வீரர் வீராங்கனைகள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறந்த திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் ஊக்குவிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழிவகை செய்யப்படும் என்பதனையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல, மதுரை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவதல் அரங்கம். ஜல்லிக்கட்டு அரங்கத்தை ரூ. 44 கோடி மதிப்பீட்டில் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். கேலோ இந்தியா போட்டிகளை மதுரையிலும் நடத்தினோம். மேலும், இன்றைக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட விளையாட்டு அருகில் உள்ள விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டு ரூ. 6 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட அனைத்து ஏற்பாடுகளும் நடைப்பெற்று வருகிறது. ஒலிம்பிக் தடகள வீராங்கனை ரேவதி போன்ற விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுடைய நீண்டநாள் கோரிக்கை ஒரு செயற்கை இழை தடகள ஓடுபாதை, ரூ. 8.10 கோடி மதிப்பீட்டில் மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி விளையாட்டரங்கள் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தோம். அதனடிப்படையில் மதுரையில் இருக்கக் கூடிய சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் ரூ. 3 கோடி மதிப்பில் விளையாட்டு அரங்கம் அமைக்கின்ற பணி நடைப்பெற்று வருகிறது. விரைவில் அந்த விளையாட்டரங்கமும் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றி என்பது சுலபமாக கிடைக்காது. நீண்ட தூரம் ஓடினால் தான் அதிக உயரம் தாண்ட முடியும் என்று கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். எனவே விளையாட்டுத் துறை மட்டுமல்ல. நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அத்தனை துறைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றால் இன்றைய இளம் தலைமுறையினர் அதற்காக உழைக்க வேண்டும். உதாரணத்திற்கு எங்களுடைய துறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள பல பணிகளுக்கு எடுத்துக்காட்டாக, பரிசாக சென்ற மாதம் Cll (Confederation of Indian Industries) என்ற அமைப்பு, இந்தியாவிலேயே விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் (Best State for Promoting Sports) என்ற விருதை தமிழ்நாட்டிற்கு வழங்கினார்கள்.

அதே போல் ஒரு வாரத்திற்கு முன்பு இந்து பத்திரிகை வெளியிடும் “Sports Star” மிகவும் பிரபலமான பத்திரிகை. எங்களை பாராட்டி இந்தியாவிலேயே விளையாட்டை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று (Best State for Promoting Sports) என்ற விருதை ஒரு வாரத்திற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வழங்கினார்கள். அது மட்டுமல்ல. தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகள் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினோம்.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி. இதில் பதக்கப் பட்டியலை பார்த்தால் தமிழ்நாடு முதன்முறையா வரலாற்றிலேயே முதன்முறையா இரண்டாவது இடத்தை பிடிச்சது. அந்த விளையாட்டு வீரர்கள் அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை உங்கள் அனைவரின் சார்பாக கூறிக்கொள்கின்றேன். இங்கே உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேசன் மதுரையில் நடத்துவதற்காக பாராட்டை தெரிவித்தார். மதுரையில் நடத்துவதற்கு ஒரு காரணம் உண்டு. அது என்ன காரணம் என்றால் சென்ற வருடம் ஒரு ஐந்து மாதங்களுக்கு முன்பு அமைச்சர்  மூர்த்தி இதே மதுரைக்கு என்னை அழைத்து வந்து கிட்டத்தட்ட 1360 கிரிக்கெட் அணிகளுக்கும் கிரிக்கெட் கிட் பரிசாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். எனவே தான் அவர் கட்சி சார்பாக நிகழ்ச்சியை நடத்தினார். நான் என்னுடைய துறையின் சார்பாக இதே மதுரையில் இந்நிகழ்ச்சியை நடத்தி காட்டுகிறேன் என்று மதுரையில் இதை துவங்கி இருக்கின்றோம். எனவே, வந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொண்டு இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் அந்த நாட்டினுடைய மனித வளம் சிறந்து விளங்கும். அதற்கு இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் பெற்ற அத்தனை ஊராட்சிகளையும், அந்தந்த ஊராட்சினுடைய முகங்களாக உள்ள மாணவர்கள். இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அத்தனை பேரையும் வாழ்த்தி பாராட்டுகிறேன்” என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப. மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி. இ.ஆ.ப. மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார். இ.ஆ.ப. மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன். சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், ஆ. வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சூர்யகலா கலாநிதி, சர்வதேச தடகள வீராங்கனை செல்வி. ரேவதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related posts

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு