ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் – “வானவில்” கூட்டரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்!!

சென்னை: ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் மற்றும் “வானவில்” கூட்டரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாசியுடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை நினைவு கூறும் வகையில் சென்னை, சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலக கட்டடத்தின் 4-ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் – வானவில்” கூட்டரங்கத்தை (26.06.2024) கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை நினைவுகூறும் வகையில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகம், என்.வி.என்.மாளிகை வளாகத்தை “பசுமை வளாகமாக” மாற்றும் நோக்கத்திலும், கூட்டுறவுத்துறை சார்ந்த அலுவல் கூட்டம் நடைபெறும் போது மாநிலம் முழுவதும் உள்ள துறை அலுவலர்கள் பங்கேற்கும் வகையிலும், அதன் 4வது தளத்தில் 4000 சதுர அடியில் 200 இருக்கைகளுடன் குளிர்சாதன வசதியுடன் கூடிய “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் – ”வானவில்” கூட்டரங்கம் சுமார் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்ட அரங்கத்தின் மேற்கூரையில் 78 கிலோவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சூரிய ஒளி தகடுகள் (Solar Panel) அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அலுவலக கட்டடம் முழுவதற்கும் சூரியஒளி மின்சக்தி பயன்படுத்தப்படவுள்ளது. இதன் வாயிலாக ஒரு நாளைக்கு 312 யூனிட் மின்சாரம் என்ற அடிப்படையில் ஒரு மாதத்திற்கு 9,300 யூனிட் மின்சாரம் கிடைக்கும். வர்த்தக மதிப்பில் ஒரு யூனிட் ரூ.8.70 வீதம் சுமார் ரூ.80,000/- வரை சேமிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் டாக்டர் என்.சுப்பையன், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜே.விஜயராணி, இ.ஆ.ப., தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் எஸ்.சுப்ரமணியன் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு