கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மாநில கருத்தரங்கம்: சென்னையில் இன்று நடக்கிறது

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் கடந்த ஜூன் 2023 முதல் தமிழக அரசால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளால் கருத்தரங்கங்கள், புகைப்பட கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் அமைத்துள்ளார்.

இந்த குழுக்களில் ‘சட்டமன்ற நாயகர்-கலைஞர்’ என்ற விழா குழு, சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு தலைவராகவும், இணை தலைவர்களாக பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோரையும், உறுப்பினர்களாக முன்னாள் பேரவை தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்எல்ஏ உறுப்பினர் ஞானசேகரன், முன்னாள் பேரவை செயலாளர்கள் டில்லிதுரை, செல்வராஜ், தினத்தந்தி நிர்வாக ஆசிரியர் சுகுமார், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோரை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடந்த ஒரு வருடத்தில் 57 கல்லூரிகளிலும், 63 பள்ளிகளிலும் ‘நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது’ என்ற தலைப்பில் கருத்தரங்குகளை நடத்தியது. இதன்மூலம் முன்னாள் முதல்வர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய மகத்தான தொண்டையும், தமிழகம் முன்னேற்றம் பெறவும், தமிழினம் எழுச்சி பெறவும் அவர் ஆற்றிய அரும் பணிகள் குறித்தும், தமிழக மக்களும், மாணவ செல்வங்களும் தெரிந்துகொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தன.

கடந்த 27-2-2024 அன்று சென்னை, மாநில கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் பேரவை தலைவர் தலைமையில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று (29ம் தேதி) பள்ளி மாணவர்களுக்கான மாநில கருத்தரங்கம் சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள, ரோசரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 61 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது பேச்சாற்றலை வெளிப்படுத்த இருக்கிறார்கள்.

கலைஞரின் சேவைகளை நினைவுகூரும் வகையில் நடைபெற இருக்கும் மாநில கருத்தரங்கத்தில் பேரவை தலைவர் மு.அப்பாவு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு