செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை; பா.ஜ.வின் கொடுங்கோல் ஆட்சி என்பது நிரூபணமாகி உள்ளது: நாகர்கோவிலில் சீமான் பேட்டி

நாகர்கோவில்: தேர்தல் நெருங்க, நெருங்க இது போன்ற கைது நடவடிக்கைகள் இருக்கும் என்று, செந்தில்பாலாஜி கைது குறித்து சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு நாகர்கோவில் வந்தார். இன்று மாலை நடக்கும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்கிடையே இன்று காலை அவர் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியது: அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்ைல. செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வருகிறது. அவர் குணமடைய வேண்டும். ஆட்சியில் உள்ளவர்கள் அவரவர் விருப்பப்படி செய்கிறார்கள். அதிகாரத்தை அவரவர்கள் விருப்பப்படி நடத்துகிறார்கள். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை வீடு ஏறி குதித்து கைது செய்தார்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரையும் கூட வீட்டுக்குள் புகுந்து சென்று கைது செய்தார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க இது போன்ற கைது சம்பவங்களை அதிகளவில் பாஜக செய்யும். இந்த நடவடிக்கை எதிர்பார்த்தது தான். இது ஒரு ஜனநாயக நாடு தானா? என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவைகள் தன்னாட்சி அமைப்பு என்று நினைக்கிறோம். இவைகள் ஆட்சியின் 5 விரல்களாக உள்ளன. என்னை பிடிக்கவில்லை என்றால் என் வீட்டிற்கு தேசிய புலனாய்வு முகமை வரும். அந்த வகையில் தான் ேதசிய புலனாய்வு அமைப்பால் பலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. கொடுங்கோல் ஆட்சி. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சொன்னால் இவ்வளவு காலம் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் அச்சுறுத்துவதற்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

மோடி, அமித்ஷா சொல்வதை தான் அண்ணாமலை செய்வார். அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்திற்கு இப்போது கைது என்றால் அது நேர்மையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தவறு நடந்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எப்போதோ நடந்ததற்கு இப்போது கைது செய்வது எப்படி என்பது தெரியவில்லை. ஊழலைப் பற்றி பேசுவதற்கு இந்தியாவில் எந்த ஆட்சியாளருக்கு தகுதி இருக்கிறது. மம்தா பானர்ஜி, பினராய் விஜயன் போன்றவர்கள் பேசலாம். பாரதிய ஜனதாவை சேர்ந்த அண்ணாமலை பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? மகாராஷ்டிராவில் 40 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினீர்கள். அதற்கு பணம் எங்கிருந்து வந்தது? அது ஊழல் இல்லையா? பழி வாங்குவதற்காக தான் இது போன்ற அமைப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் உள்ளது. இவர்கள் செய்யும் ஊழல் குறித்து யார் நடவடிக்கை எடுப்பது? அடுத்த ஆட்சி வந்தால் தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். நிலத்தை அழித்துவிட்டு புதிதாக சாலை அமைத்து பசுமை சாலை என்கிறார்கள். அதுபோல்தான் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை போன்றவைகளை ஏவி விட்டு ஜனநாயகம் இல்லை, பணநாயகம் தான் உள்ளது என்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி