1978ம் ஆண்டு கைது செய்யப்பட்ட போது இந்திரா காந்திக்காக விமானத்தை கடத்திய மாஜி எம்எல்ஏ மரணம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பைரியா மாவட்டம் மூன் ஷப்ரா கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ போலநாத் பாண்டே (71), முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், லக்னோவில் உள்ள தனது வீட்டில்நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவர் கடந்த 1978ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கைது செய்யப்பட்டபோது விமானத்தை கடத்தியவர் என்பது தெரிய வந்துள்ளது.

போலநாத் பாண்டே தனது நண்பர்களுடன் சேர்ந்து, இந்திரா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் இருந்து டெல்லி நோக்கி 132 பேருடன் புறப்பட்ட விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தினார். போலி துப்பாக்கியை கொண்டு விமானத்தை கடத்திய பாண்டே விமானத்தை நேபாளத்திற்கு கொண்டு செல்லும்படி விமானியை மிரட்டினார். ஆனால், எரிபொருள் இல்லாததால் விமானம் வாரணாசியிலேயே தரையிறக்கப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது.

உத்தரபிரதேச முதல்வராக இருந்த ராம் நரேஷ் யாதவ் இருந்தார். பலமணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாநில அரசு உறுதி அளித்த பின்னர் விமானம் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. கோரிக்கை ஏற்கப்பட்டதால் போலநாத் பாண்டே, அவரது நண்பர் தேவேந்திர பாண்டே இருவரும் சரண் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீதான வழக்கு 1980ம் ஆண்டு இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் பதவியில் அமர்ந்தவுடன் கைவிடப்பட்டது. பின்னர் போலநாத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு