ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரன்: ஆதாரங்களை வைத்து மடக்கிய போலீசார்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பிரபல தாதா வியாசர்பாடி நாகேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். இவரை, 3 நாட்கள் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டமிட்டது எப்படி, ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல வேண்டும் என அணுகியது யார், ஆம்ஸ்ட்ராங்குடன் முன்விரோதம் ஏற்பட்டது எப்படி, சிறைக்குள் சந்தித்த ரவுடிகள் யார், என பல்வேறு கேள்விகளை முன் வைத்து நாகேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் நாகேந்திரன், பெரும்பாலான கேள்விகளுக்கு அமைதியாகவே இருந்ததாகவும், அவ்வப்போது பதில் கூறினாலும் தனக்கும் இந்த கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறுவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனையும் நேரில் வைத்துக் கொண்டு விசாரித்தும், நாகேந்திரன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. நாகேந்திரனை கைது செய்யும்போதே, வாரன்டில் கையெழுத்திட மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதும் போலீஸ் காவலில் செல்ல மாட்டேன் என கூறி முறையிட்டதாகவும் தகவல் வெளியானது.

வாரத்தில் 2 முறை டயாலிசிஸ் செய்து வருவதாக நீதிமன்றத்தில் முறையிட்ட நாகேந்திரன், போலீஸ் விசாரணையிலும் தனது உடல் நிலையை காரணம் காட்டிவிட்டு தொடர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் போலீசார் நாகேந்திரன் மற்றும் அஸ்வதாமனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே கேள்விகளை இருவரிடமும் தனித்தனியாக கேட்கும் போலீசார் மாறுபட்ட பதில் வரும்போது தங்களிடம் உள்ள ஆதாரங்களை காட்டி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அஸ்வத்தாமனிடம் விசாரணை மேற்கொள்ளும் போது ஒரக்காடு நிலத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

தான் அந்த இடத்திற்கு சென்றதில்லை எனவும் கூறியுள்ளார். அப்போது போலீசார் அவர் அங்கு சென்றதற்கான ஆதாரங்களை காண்பித்தபோது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஒரக்காடு நிலம் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை போலீசார் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டதாகவும் அதற்கு பல தவறான பதில்களை அஸ்வத்தாமன் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசாருக்கு கிடைத்த ஆதாரங்களை காட்டி தொடர்ந்து குறிப்பிட்ட அந்த நில பிரச்னை குறித்து போலீசார் தீவிரமாக அப்பா, மகன் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவரது மைத்துனர் உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் அழைத்து அவர்களுக்கு இந்த வழக்கில் ஏதாவது தெரியுமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்றுடன் நாகேந்திரனுக்கு 3 நாள் போலீஸ் காவலும், அஸ்வத்தாமனுக்கு 4 நாள் போலீஸ் காவலும் முடிவடைவதால் இன்று மாலை இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்