ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி: மேலும் 2 ரவுடிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதில் மேலும் 2 ரவுடிகளை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். செம்பியம் போலீசார் பொன்னை பாலு, ராமு, அருள் மற்றும் ஹரிஹரன் ஆகிய 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஹரிஹரனை 7 நாட்களும் மற்ற மூன்று பேரை 5 நாட்களும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த மனு நேற்று காலை எழும்பூர் 5வது நீதிமன்ற நடுவர் ஜெகதீசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பூந்தமல்லி சிறையில் உள்ளவர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், பொன்னை பாலு உட்பட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர்.

அதன் அடிப்படையில் ஹரிஹரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடிகள் சம்பவ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். சம்பவ செந்திலை உத்தரபிரதேச மாநிலத்தில் வைத்து போலீசார் சுற்றி வளைத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

* புதிய தலைவர் எழுப்பிய சந்தேகம்

புதிய மாநில தலைவர் ஆனந்தன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சனிக்கிழமை கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். வழக்கு விசாரணை எவ்வாறு செல்கிறது என்பதை பார்த்து எங்களின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என தெரிவித்தார்.

* ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு பதவி

பெரம்பூரில் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த் மற்றும் கோபிநாத் ஆகியோர் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒருமனதாக வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் அக்கட்சியின் தமிழக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், மாநில துணைத்தலைவராக இளமான் சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை