ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கோகுல், விஜய், சிவசக்தி மூன்று பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது மகளும் உள்ளனர். இவர் மீது சில குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த ஆம்ஸ்ட்ராங், கட்டுமான பணிகளை பார்வையிட்டபோது 8 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

இதனை தடுக்க வந்த அவரது அண்ணன் வீரமணி, அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி, அப்துல் கனி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து அன்றிரவே 8 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பேரில் ஒருவரான செல்வராஜ் என்பவர் திருநின்றவூரில் பாஜ கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (25), விஜய் (19), திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த சிவசக்தி (26) ஆகிய 3 பேர் சரணடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூவரையும் 19-ம் தேதி வரை சிறையிலடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்