ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற காவல்துறை தயங்காது: எடப்பாடி, மாயாவதிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

புதுக்கோட்டை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற காவல்துறை தயங்காது என எடப்பாடி, மாயாவதிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை நியாயமாக செயல்படும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நம்புகிறார்கள். அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களும் நம்புகிறார்கள். இதில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. முதலமைச்சருக்கும் கிடையாது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வாங்கி தருகின்ற அளவிற்கு நமது அரசு செயல்படும்.

சமூக நீதியை கட்டிக்காப்பதில் இந்தியாவிலேயே திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் இணையாக வேறு எந்த கட்சியும் கிடையாது. வேறு யாரையும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் நடக்கின்ற இயக்கம்தான் திமுக. இது ஏழை மக்களுடைய இயக்கம். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் தனிப்பட்ட எந்த மனிதர்களுக்காக வேண்டி பணிந்து போக வேண்டிய அவசியமும், அவர்களை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அவர் எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் குற்றவாளி கூண்டில் ஏற்றுவதற்கு தமிழ்நாட்டின் காவல்துறை என்றைக்குமே தயங்காது.

ஓபிஎஸ் அவரது காலத்தை மறந்து விட்டார். எடப்பாடி பழனிசாமியும் அவர்களது காலத்தை மறந்து விட்டனர். நாங்கள் நடைபெறக்கூடிய சம்பவங்களை தடுத்திருக்கிறோம் தடுக்க முயற்சி செய்திருக்கிறோம். நாங்கள் எடுத்திருக்கும் கடும் நடவடிக்கையை போல் எந்த அரசும் நிச்சயம் எடுக்க முடியாது. யாரும் எங்களுக்கு வேண்டியவர்கள் அல்ல. எங்களது கட்சிக்காரர்களும் அல்ல. அதே நேரத்தில் கடந்த காலத்தில் பொள்ளாச்சி சம்பவங்கள் எல்லாம் பார்த்தால் யார் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலை தற்போது கிடையாது. அந்த நிலையும் கிடையாது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதால் தான் நாம் சுதந்திரமாக நடந்து வருகின்றோம். தமிழ்நாட்டில் இருக்கும் சுதந்திரத்தை போல் இந்த அளவிற்கு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

மாயாவதி அவரது ஆட்சி காலத்தை மறந்து விட்டார். உத்தரபிரதேசத்தில் அப்போது எப்படி எல்லாம் ஆட்சி செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் உத்தரபிரதேசத்தில் ஆட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்ட அளவிற்கு இருக்கிறார். அவ்வாறு இருந்தாலும் நாங்கள் அவரையும் மதிக்க கூடியவர்கள். அவர்களை நாங்கள் வெறுக்கவில்லை. அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மற்றவர்கள் எல்லோரும் தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை