ஒரு வருடம் காத்திருந்து பழிவாங்கினர்; ஐந்து முறை முயற்சி தோல்வியில் முடிந்ததால் 6வது ஸ்கெட்சில் தீர்த்துக்கட்டியது அம்பலம்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பகீர் தகவல்

பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த வெள்ளிக்கிழமை பெரம்பூரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அயனாவரத்தில் தற்போது அவர் குடியிருந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதன்பிறகு நேற்று முன்தினம் காலை பெரம்பூர் பந்தர் கார்டன் அரசு பள்ளியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கிருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஆவடி அருகே உள்ள பொத்தூர் பகுதியில் பவுத்த முறைப்படி நள்ளிரவில் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த அன்றைய தினமே அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39), திருமலை (45), மணிவண்ணன் (25), திருவேங்கடம் (33), ராமு (38), சந்தோஷ் (32), அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய 8 பேர் சரணடைந்தனர். சனிக்கிழமை இரவு பூந்தமல்லி கோகுல் (25), விஜய் (19), சிவசக்தி (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்துள்ள அதிர்ச்சி தகவல்கள் வருமாறு;

கடந்தாண்டு ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக கடந்த ஒரு வருடமாக காத்திருந்தோம். ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக உணவு டெலிவரி ஊழியர்கள்போல வந்தோம். சம்பவம் நடந்தபோது ஆம்ஸ்ட்ராங் 3 பேருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒருவர் உணவு ஆர்டர் செய்தீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி என்பவர், ‘‘நீங்கள் யார் எனக் கேட்டபோது அடுத்தடுத்து அங்கு வந்த நபர்கள் பாலாஜியை கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டுள்ள குழியில் தள்ளிவிட்டுவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கை வெட்ட வந்தபோது அங்கு பணியில் இருந்த கட்டுமான ஊழியர்கள் தடுத்துள்ளனர். இதனால் அவரை வெட்டியவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் பொன்னை பாலு மட்டும் கட்டுமான பணியாளர்களிடம் சிக்கிக்கொண்டார். அதன் பிறகு தப்பித்து அவர் வேகமாக ஓடியுள்ளார். அப்போது ஆம்ஸ்ட்ராங்கில் அண்ணன் வீரமணி வந்தபோது அவரையும் வெட்டி விட்டு தப்பியுள்ளனர்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆற்காடு சுரேஷ் இறந்த நாளில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி வந்துள்ளனர். 5 முறை ரெக்கி ஆபரேஷன் எனக் கூறப்படும் வேவு பார்த்தல் வேலையை மேற்கொண்டதாகவும் ஆனால் ஐந்து முறை கடைசி நேரத்தில் போதிய ஆட்கள் இல்லாததால் கொலை செய்யும் திட்டத்தை கைவிட்டதாகவும் ஆற்காடு சுரேஷ் பிறந்தநாள் என்பதால் அனைத்து ஆட்களையும் ஒன்று திரட்டி கொலை செய்ததாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொலை சம்பவத்தை செய்வதற்கு முன்பு சுமார் பத்து நாட்கள் வரை தினமும் ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் பாலோ செய்துள்ளது. தினமும் அவர் மாலையில் எத்தனை மணிக்கு வருவார் எந்தெந்த பகுதியில் நிற்பார் எவ்வளவு நேரம் பேசுவார் என்பதை மிகவும் துல்லியமாக கணித்துள்ளனர். இதன்பிறகு அவர்கள் மூன்று இடத்தை தேர்வு செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதி. ஆம்ஸ்ட்ராங் அலுவலகம் உள்ள பகுதி. மற்றும் அதே பகுதியில் உள்ள புத்தர் கோயில் ஆகிய இடங்களை வேவு பார்த்துள்ளனர். இறுதியாக அவரது வீட்டு பகுதியில் வைத்து ஏற்கனவே ஸ்கெட்ச் போட்டது போல கொலையை நடத்தி முடித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப் போகிறோம் என்று சிலரை அழைத்தால் வரமாட்டார்கள் என்பதால் ஒரு பிரச்னை எனக் கூறி சிலரை அழைத்து வந்துள்ளனர். பூந்தமல்லியில் பிடிபட்ட கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய மூன்று பேரையும் பொன்னை பாலுவின் உறவினர் மணிவண்ணன் என்பவர் சிறு பிரச்னை எனக் கூறி அழைத்துவந்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரசியல் ரீதியாக பெரிய அளவில் எதிரிகள் இல்லை என்ற போதிலும் தொழில் ரீதியாக அவருக்கு நிறைய எதிரிகள் குறிப்பாக பெரிய ரவுடிகளுடன் மோதல் இருந்துள்ளது.குறிப்பாக ஆற்காடு சுரேஷ் மரணத்திற்கு ஆர்ம்ஸ்ட்ராங் தான் காரணம் என ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆற்காடு சுரேஷுக்கு எதிரியாக இருந்த பாம் சரவணன், ஜெயபால் ஆகிய இருவரை வைத்துஆற்காடு சுரேஷ் கதையை ஆம்ஸ்ட்ராங் முடித்ததாகவும் இதற்காக ஆம்ஸ்ட்ராங் பண உதவி செய்ததாகவும் ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே பாணியில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவை வைத்து ஆர்ம்ஸ்ட்ராங்கை வேறு ஒரு கும்பல் இயக்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். கொலையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் கொள்கின்றனர்.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது