ஆம்ஸ்ட்ராங்கை கழுத்தில் வெட்டிக் கொன்ற பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை துப்பாக்கியால் சுட்டதால் நடவடிக்கை, சென்னையில் பரபரப்பு சம்பவம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான பிரபல ரவுடி திருவேங்கடம், நேற்று சென்னையில் போலீசாரின் எதிர்தாக்குதலால் சுட்டுக் கொல்லப்பட்டார். கள்ளத் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி திருவேங்கடத்தை, புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் அதிகாலை நேரத்தில் போலீசார் சுட்டனர். காயம் அடைந்த திருவேங்கடத்தை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர் உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் சென்னையிலும், அதன் புறநகர் பகுதியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி மாலை 6.55 மணிக்கு சென்னை பெரம்பூரில் அவரது புதிய வீடு அருகே ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் போல் வேடம் அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பலினால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

கொலை குற்றவாளிகள் அனைவரும் 3 பைக்குகளில் அங்கிருந்து தப்பிய இந்த சம்பவம், தமிழகத்தை உலுக்கியது. சென்னையில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக இருந்த அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டன. இக்கொலை தொடர்பாக, பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவனுமான ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, அவரது மைத்துனர் அருள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து சட்டம் -ஒழுங்கு குறித்து எழுந்த கடும் விமர்சனங்களால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண், சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். உடனடியாக அப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அருண், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தனிக் கவனம் செலுத்த உத்தரவிட்டு விசாரணையை முடுக்கிவிட்டார். சென்னையில் பகல், இரவு ரோந்து உள்பட போலீசார் கடும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, மைத்துனரான வழக்கறிஞர் அருள் (33), குன்றத்தூர் பெரியார் நகர் காமராஜர் தெருவை சேர்ந்த ரவுடி திருவேங்கடம் (33), ராணிப்பேட்டை கவுண்டபாளையத்தை சேர்ந்த கோகுல் (25), விஜய் (19), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசக்தி (26), வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), திருநின்றவூர் கன்னடபாளையத்தை சேர்ந்த ராமு (எ) வினோத் (38), மணிவண்ணன், சந்தோஷ், ஆட்டோ டிரைவர் திருமலை ஆகிய 11 பேரை 7 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதன் ஒரு நடவடிக்கையாக 11 பேரையும் போலீசார் பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். 11 பேரின் செல்போன்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலுவுடன் ரவுடி திருவேங்கடம் அடிக்கடி போன் செய்து பேசி வந்தது தெரிந்தது. உடனே திருவேங்கடத்தை போலீசார் தனியாக விசாரித்ததில், வேறு ஒரு கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது ஆற்காடு சுரேசுடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும், அதன்பிறகு ஆற்காடு சுரேஷின் கூலிப்படையில் திருவேங்கடம் சேர்ந்ததாகவும் தெரிய வந்தது.

ஆற்காடு சுரேஷின் நட்பு கிடைத்த பிறகு குன்றத்தூர் பகுதியில் திருவேங்கடம் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இத்துடன் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்க ஆற்காடு சுரேஷின் சகோதரரான பொன்னை பாலு திட்டமிட்டபோது, அதற்கு உடந்தையாக ரவுடி திருவேங்கடமும் இணைந்து செயல்பட்டதும், அதற்காக திருவேங்கடம் தலைமையில்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கூட்டாளிகளை அவர் தேர்வு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 10 நாட்களாக ஆன்லைன் டெலிவிரி ஊழியர் போல உடை அணிந்து, ஆம்ஸ்ட்ராங் செல்லும் இடங்களுக்கு ஆட்டோ டிரைவரான திருமலையுடன் சேர்ந்து பின்தொடர்ந்து நோட்டமிட்டுள்ளார் திருவேங்கடம். அப்போது, புதிதாக கட்டி வரும் வீட்டை பார்வையிட வாரத்திற்கு 3 நாட்கள் ஆம்ஸ்ட்ராங் தனியாக வருவது திருவேங்கடத்திற்கு தெரியவந்தது. அதை பலமுறை நேரில் சென்றும் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படியே கடந்த 5ம் தேதி புதிதாக கட்டும் வீட்டிற்கு ஆம்ஸ்ட்ராங் வந்தபோது, அவரை பின்தொடர்ந்த திருவேங்கடம் தலைமையிலான கலிப்படை ரவுடிகள் ஆன்லைன் டெலிவிரி ஊழியர்கள் போல் வந்து ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்துள்ளனர்.

அப்போது ஆம்ஸ்ட்ராங் சுதாரித்துக் கொண்டு தன்னை வெட்ட வந்தவர்களில் ஒருவனிடம் இருந்து அரிவாளை பறித்து தாக்க முயன்ற போது, ரவுடி திருவேங்கடம் அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கின் கழுத்து பகுதியை ஓங்கி வெட்டியுள்ளார். அதில் நிலைதடுமாறிய ஆம்ஸ்ட்ராங் கீழே சாய்ந்து வீழ்ந்தபோது மற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து வெட்டிக் கொன்றுள்ளனர். ரவுடி திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங் கழுத்திலேயே 4 முறை ஓங்கி வெட்டியதில்தான் அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார் என்றும் போலீசார் விசாரணயில் திருவேங்கடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக திட்டமிட்டு முன்கூட்டியே கள்ளத் துப்பாக்கி ஒன்றும் வாங்கி வைத்திருந்ததாகவும் போலீசார் விசாரணையில் ரவுடி திருவேங்கடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, கொடூங்கையூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தனிப்படை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் ரவுடி திருவேங்கடத்தை நேற்று முன்தினம் இரவு மாதவரத்தை அடுத்த ஆடுத்தொட்டி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது ரவுடி திருவேங்கடம் அப்பகுதியில் பல இடங்களில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக பல மணிநேரம் தனிப்படை போலீசாருக்கு தண்ணி காட்டியுள்ளார்.

கடைசியாக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என திருவேங்கடம் போலீசாரிடம் கூறியதால் வாகனத்தை நிறுத்தியபோது திருவேங்கடம் திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத தனிப்படை போலீசார் பின்தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிட்டேரியன் வில்லேஜ் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஷெட் அருகே திருவேங்கடத்தை கண்டனர்.

அப்போது போலீசாரை பார்த்த திருவேங்கடம், இரும்பு ஷெட்டில் புதைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து, போலீசாரை நோக்கி சுட்டபடி ஓடினார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், ரவுடி திருவேங்கடத்தை பலமுறை எச்சரித்தும் அவர் நிற்காமல் ஓடியுள்ளார். ஒரு கட்டத்தில் தாக்குதலை சமாளிக்கும் வகையில் தனிப்படையில் இருந்த இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, தற்காப்புக்காக ரவுடி திருவேங்கடத்தை நோக்கி மூன்று முறை சுட்டு எதிர்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ரவுடி திருவேங்கடத்தின் வலது பக்க வயிறு மற்றும் இடது பக்க மார்பில் குண்டுகள் பாய்ந்தன. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த திருவேங்கடத்தை போலீசார் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ரவுடியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரவுடி திருவேங்கடத்தின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

உடனடியாக இந்த தகவல்கள் அனைத்தும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத்தொடர்ந்து கமிஷனர் அருண் உத்தரவுப்படி, சம்பவ இடத்திற்கு சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் இணை கமிஷனர் விஜயகுமார், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன், உதவி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது ரவுடி திருவேங்கடம் கள்ளத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த இரும்பு ஷெட் மற்றும் சுடப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்தனர்.

மேலும் தனிப்படையில் இருந்த அதிகாரிகளிடமும் என்கவுண்டர் குறித்து கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தினார். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி திருவேங்கடம் போலீசார் விசாரணையின் போது தப்பி ஓட முயன்று, அதனால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த என்கவுன்டர்
சென்னை ராயப்பேட்டையில் 2018ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி தர்கா அருகே சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை கிண்டல் ெசய்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை தொடர்ந்து, தலைமை காவலர் ராஜவேலு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, ரவுடி ஆனந்தன், தலைமை காவலர் ராஜவேலுவை ஓடஓட அரிவாளால் தலையில் வெட்டினான். இதில் தீவிர சிகிச்சை அளித்தும் தலைமை காவலர் ராஜவேலு உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ரவுடி ஆனந்தனிடம் உதவி கமிஷனர் சுதர்சனன் தலைமையிலான தனிப்படையினர், ராஜவேலுவை வெட்டிய ஆயுதத்தை பறிமுதல் செய்ய தரமணி பகுதிக்கு அழைத்து சென்றபோது, உதவி ஆய்வாளர் இளையராஜாவை வெட்டிவிட்டு ரவுடி ஆனந்தன் தப்பி ஓடினான். அப்போது தற்காப்புக்காக உதவி கமிஷனர் சுதர்சனன் துப்பாக்கியால் சுட்டத்தில் ரவுடி ஆனந்தன் உயிரிழந்தார். அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் இருந்தார்.

அதேநேரம், சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி சங்கர் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். என்கவுன்டர் குறித்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், என்கவுண்டர் செய்த இன்ஸ்பெக்டர் ரவுடி மீது தனிப்பட்ட பகைக்காக செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக என்கவுன்டர் செய்த இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இதனால் போலீசாரின் என்கவுண்டர் பட்டியலில் ரவுடி சங்கர் இடம் பெறவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் காலத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

* கூடுதல் கமிஷனர் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடத்தை விசாரணைக்காக தனிப்படை இன்ஸ்பெக்டர்கள் முகமது புகாரி, சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை நேற்று முன்தினம் மாதவரம் அருகே பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற போது, போலீசார் பிடியில் இருந்து தப்பி சென்று, வெஜிட்டேரியன் வில்லேஜ் பகுதியில் உள்ள இரும்பு ஷெட்டில் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டபோதுதான் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். விசாரணை கைதி ஒருவர், போலீசாரின் கஸ்டடியில் இருந்து தப்பிக்கும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்த தனிப்படை போலீசாரிடம் கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தி வருகிறார்.

* ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை
என்கவுன்டர் செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி திருவேங்கடத்தின் உடல் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சில நடைமுறை சிக்கல் காரணமாக பிரேத பரிசோதனை செய்யப்படல்லை. இதையடுத்து இன்று காலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ பதிவுகளுடன் ரவுடி திருவேங்கடம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

* ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் ஏன்? சென்னை பெருநகர காவல்துறை விளக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5ம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், குன்றத்தூரை சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர் மேற்கண்ட கொலை வழக்கு தவிர 2 கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு ஆகிய 5 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் 14 தேதி அதிகாலை, போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டுமந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு எதிரி தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, எதிரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.

உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த எதிரி உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சிசிடிவி காட்சி
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சரணடைந்து கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள், உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும், கொலை நடந்த அன்று வெளியான சிசிடிவி காட்சியில் உள்ள நபர்களுடன் ஒத்துப்போகவில்லை என்று சில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி இருந்தன. ஆனால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வெளியான வீடியோ காட்சியில், குற்றவாளிகள் யார் யார் என்பதும், கொலையாளிகள் எங்கிருந்து வருகிறார்கள், கொலை நடந்தது எப்படி என தெளிவாக தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் உள்ள நபர்களும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளும் உண்மையான குற்றவாளிகளே என உறுதி செய்யப்பட்டுள்ளது.

* ரவுடியின் பின்னணி
என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் மீது., 2015ம் ஆண்டு குன்றத்தூர் தாமரைப்பாக்கம் கூட்ரோட்டில் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான புளியந்தோப்பு தென்னரசு என்பவரை கொலை செய்த வழக்கு உட்பட 3 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி உட்பட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர், கூலிக்கு ஆட்களை கொலை செய்யும் கூலிப்படையில் முக்கிய பங்காற்றியுள்ளார். குன்றத்தூர் பகுதியில் ரவுடியாகவும் வலம் வந்துள்ளார்.

* ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிச் சாய்க்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி மாலைநேரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். படுகொலை நடந்த பகுதியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கை ரவுடிகள் கண்காணித்து, அவரை சுற்றி வளைத்து முதலில் வெட்டியதாக 3.32 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

ரவுடி திருவேங்கடம்தான் முதலில் அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கின் கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார். அதன் பிறகுதான் மற்றவர்கள் ஆம்ஸ்டிராங் உடலின் பல இடங்களில் வெட்டியுள்ளனர். அந்த வீடியோவில் தன்னை வெட்ட வந்த ரவுடிகளில் ஒருவனை ஆம்ஸ்ட்ராங் திருப்பித் தாக்கும் காட்சியும் பதிவாகியிருந்தது. ஆம்ஸ்ட்ராங்கை ரவுடிகள் வெட்டிக் கொல்லும் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளத்திலும் பரவி வருகிறது.

Related posts

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

மதுரை அருகே உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் காயம்