ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னையில் 200 ரவுடிகள் அதிரடி கைது: வெளிமாநிலத்தில் பதுங்கி உள்ளவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சென்னை முழுவதும் 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வெளிமாநிலங்களில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி இரவு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 வக்கீல்கள் உட்பட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது, திட்டமிட்ட படுகொலை என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிடமாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை பெருநகர் காவல்துறை புதிய கமிஷனராக கூடுதல் டிஜிபி அருண் நியமிக்கப்பட்டார்.

கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள 104 காவல் நிலையங்களில் சரித்தரப்பதிவேடு குற்றவாளிகள் அனைவரின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 104 காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள், உளவுத்துறை இன்ஸ்பெக்டர்கள் தங்களது பகுதியில் வசிக்கும் ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கேட்டகிரியாக பிரித்து ரவுகளை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பணி தற்போது நடந்து வருகிறது. அதேநேரம், கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள ரவுடிகள் மற்றும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 15 நாட்களில் சென்னை பெருநகர் காவல் எல்லையில் தற்போது கொலை வழக்குகளில் தொடர்புடைய 200க்கும் மேற்பட்ட ரவுடிகளை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் கைதுக்கு பயந்து ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க உதவி கமிஷனர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் பறந்து செயலி மூலம் தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்ய பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு