ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது: கி.வீரமணி மற்றும் வைகோ இரங்கல்!!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூக விரோதிகளால் நேற்று படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளைப் பரப்புவதில் முனைப்புக் காட்டியதுடன், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டியவர். அவரது படுகொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டப்படியான கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவரது மறைவால் இழப்புக்குள்ளாகி உள்ள அவரது வாழ்விணையர், மகன் மற்றும் குடும்பத்தி னருக்கும், பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்கள் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்; பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிக இளம் வயதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை ஏற்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். படுகொலைக்குக் காரணமான உண்மையான கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கூலிக்குக் கொலை செய்யும் கும்பல் சர்வ சாதாரணமாக நடமாடுவதும், படுகொலைகளை நிகழ்த்தி வருவதும் தொடர் நிகழ்வுகள் ஆகி வருகின்றது. தமிழ்நாட்டின் நலனுக்காக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு அபாய அறிவிப்பாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கு காவல்துறையினர் இடமளிக்கக் கூடாது. பொதுவாழ்வில் இன்னும் மக்கள் பணி ஆற்ற வேண்டிய பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் அவரது இயக்க தொண்டர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்