ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய திட்டம்: சென்னை போலீஸ் தகவல்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக சென்னை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 5ம் தேதி பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலையில் தொடர்ப்புடைய நபர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 21பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 20 பேரிடம் காவலில் எடுத்து விசாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு முறையும் கைது செய்யப்பட்ட நபர்கள் கொடுக்கும் தகவலை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளும் போது அடுத்த நபர்களின் தொடர்பு அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான பின்னணி என்ன என்பது குறித்து தெரிய வேண்டும் என்பதற்காக தனிப்படை போலீசார் முக்கியமான ரவுடிகள் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக வாங்கிய பணம் எவ்வளவு, அது எங்கெங்கு பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்த தகவலையும் திரட்டியுள்ளனர். கைதானவர்கள் வைத்திருக்கும் தொகை அனைத்தையும் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 21 பேரிடம் இருக்கும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து அதில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக பண பரிவர்த்தனை ,கொலைக்கு தரப்பட்ட பணம், இதன் மூலம் வாங்கிய சொத்து எவ்வளவு என ஆய்வுசெய்து பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் சட்டபூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்

குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி

அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு