ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஆற்காடு சுரேஷின் மனைவி கைது: சென்னை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை!!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் கருதி வந்தனர்.

இந்த நிலையில், சுரேஷின் பிறந்தநாளான கடந்த ஜூலை 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல ரவுடி கும்பல்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிறகு ஆற்காடு சுரேஷ் பாணியில் அவரது குடும்பத்தினரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக ஆற்காடு அடுத்த பொன்னி கிராமத்திற்கு குடும்பத்தினர்கள் வருவார்கள் என்பதால் ஆந்திர எல்லையோர கிராமங்களில் கண்காணிப்பையும் போலீசார் தீவிரப்படுத்தி இருந்தனர். இந்த சூழலில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி போலீசில் சிக்கியுள்ளார். அவரை சென்னை அழைத்து வந்த போலீசார் கொலை திட்டத்துக்கான சதி ஆலோசனையில் அவருக்கு பங்கு இருக்கிறதா?, பண உதவி செய்தாரா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

Related posts

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன

புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி