அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையினர் ஆய்வு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை உணவாக உண்பது தொடர் கதையாக உள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம்-கோபி சாலையில் அரியப்பம்பாளையம் செங்குந்தர்நகர் பகுதியில் ஒரு சிறுத்தை சாலையை கடந்து சென்றதை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், நேற்று காலை வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே சிறுத்தை நடமாடுவதை புதுகொத்துக்காடு மற்றும் இண்டியம்பாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்ததாக தெரிவித்ததால் சிறுத்தை அரியப்பம்பாளையம் பகுதியை விட்டு தெற்கு பகுதிக்கு சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: சிறுத்தை நடமாடியதாக கூறப்பட்ட விவசாய தோட்டங்களில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் பதிவான கால் தடங்களை ஆராய்ந்ததில் இப்பகுதியில் நடமாடியது சிறுத்தை குட்டியாக இருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி கரும்பு தோட்டங்களில் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே சிறுத்தை நடமாடியதாக கூறப்படும் விவசாய தோட்டங்களில் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கேசிபி இளங்கோ, அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன், பேரூர் செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு சிறுத்தை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை