அறிவின் உதவியை நாடவில்லை என்று சொன்னால் உணர்ச்சியின் விளைவைத் தடுக்க முடியாது

மனிதர்களின் வாழ்க்கையை உணர்ச்சியும் அறிவும் வழி நடத்துகிறது. உணர்ச்சியும் அறிவும் ஒன்றுக்கொன்று அனுசரித்து சமமாக இருக்கும் வரை பெரிய அளவில் பிரச்னைகள் வருவதில்லை. ஆனால், ஒரு அளவுக்கு மேல் உணர்ச்சியின் வேகம் அதிகரிக்கும் பொழுது, அந்த வேகம் அறிவை கொஞ்சம் கொஞ்சமாகச் செயல்படவிடாமல் தடுக்கிறது. ஒரு கட்டத்தில் அறிவு என்னும் விளக்கு, அணைந்து உணர்ச்சி என்னும் நெருப்பு அணைக்க முடியாத அளவுக்கு கொழுந்துவிட்டு எரிகிறது. இதை ஒரு உதாரணத்தின் மூலமாகச் சொல்லலாம். ஒரு பொருளின் மீது நெருப்பு பற்றிக் கொள்ளுகின்ற பொழுது உடனடியாக ஏதேனும் ஒரு கருவியின் மூலமாகவோ, தண்ணீர், ரசாயனம், மண் போன்றவற்றை உபயோகப்படுத்தியோ அதனை அணைத்துவிடலாம்.ஆனால், ஒரு அளவுக்கு மேல் நெருப்பின் வேகம் அதிகரிக்கின்ற பொழுது, எத்தனை கருவிகள் பயன்படுத்தினாலும், எளிதில் அணைவது இல்லை. மிகப் பெரிய அனர்த்தத்தை உருவாக்கி விட்டுத் தான் ஓய்கிறது. இப்பொழுதும் சில நேரங்களில் காட்டில் பற்றிக் கொள்ளும் நெருப்பு பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்.

எத்தனை முயன்றும் அணைக்க முடியாமல் பல காலம் எரிவதைப் பார்க்கலாம். அதேதான் மனிதர்களின் விஷயத்திலும் நடக்கின்றது. உணர்ச்சி அறிவை விஞ்சி மேலோங்கும்பொழுது நீங்கள் தகுந்த ஆலோசனையைப் பெற்று அறிவை வளர்த்துக் கொள்ளவில்லை அல்லது அறிவின் உதவியை நாடவில்லை என்று சொன்னால், அதற்குப் பிறகு அந்த உணர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.கைகேயி மிகச் சிறந்த ராஜநீதிகளை அறிந்தவள். மனதில் கல்மிஷம் இல்லாதவள். ராமனிடத்திலும் தசரதனிடத்திலும் எல்லையற்ற அன்பு வைத்திருந்தவள். அவள் தன்னுடைய மூத்தவர்களான கோசலையிடமோ சுமித்திரையிடமோ அவமரியாதையாக நடந்து கொண்டதாக எந்த செய்தியும் ராமாயணத்தில் இல்லை. அதைப்போலவே, பரதனைவிட ராமனைக் குறைவாக எண்ணியதாக எந்தச் சான்றுகளும் இல்லை. ஆனால், அவளுடைய தாதிப் பெண்ணான மந்தரை மெல்லமெல்ல கைகேயியின் அறிவை குறைத்து உணர்ச்சியை தூண்டிவிடுகின்றாள். கடைசியில் சொந்த அறிவாலோ, துணை அறிவாலோ அணைக்க முடியாதபடி பற்றி எரியும் நெருப்பைப் போல, மிகுஉணர்ச்சி கைகேயியை எரிக்க, அது அயோத்தியின் நிலைமையை சுட்டெரித்து சாம்பலாக்கிவிடுகின்றது.

இந்தத் தூண்டுதலை மந்திரை எப்படிச் செய்கின்றாள் என்பதை அறிந்தால்தான் நம்முடைய வாழ்க்கையில் பல மந்தரைகளை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதற்குத்தான் ராமாயணம். ராமாயணத்தில் கைகேயியின் மனதை மந்தரை எப்படிக் கெடுத்தாள் என்பதை யாரும் விரிவாக சொல்வது கிடையாது. விரிவாகப் படிப்பதும் கிடையாது. மந்தரை, போதனையால் மனம் மாறினாள் கைகேயி என்ற ஒரு வரி கதையோடு நாம் கடந்து விடுகின்றோம். ஆனால் வால்மீகியும் சரி, கம்பனும் சரி அற்புதமான உளவியலை மந்தரை கைகேயி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் காட்டி இருக்கின்றார்கள்.

ராமனுக்கு மகுடாபிஷேகம் என்று சொல்லியவுடன் பழைய பகையும் சுயநலமும் மேலிட, கிடுகிடு என்று மேல்மாடத்திலிருந்து இறங்கி வந்து கைகேயியை எழுப்புகிறாள். கைகேயி அப்பொழுது அவளிடத்தில், ‘‘ஏன் பதற்றப்படுகிறாய்? என்ன நடந்தது? உன்னை யாராவது அவமதித்தார்களா? ஏதாவது குறையா? சொல்’’ என்று கேட்க, ‘‘மிகப் பெரிய வெள்ளம் வந்து உன்னையும் உன்னுடைய கௌரவத்தையும் உன்னுடைய மகனையும் மூழ்கடிக்கப் போகிறது. நீயோ அதைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல் மூடனைப் போல படுத்து கிடக்கிறாயே என் வயிறு பற்றி எரிகிறது நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், உன்னுடைய கணவன் தசரதன் உன்னைக் காப்பாற்றுவான் என்று நினைத்துக் கொண்டு இப்படி ஆனந்தமாகப்படுத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் என்னால் துக்கத்தை அடக்க முடியவில்லை. இப்படிச் சொல்லியவள், அழுதுகொண்டே தசரதனை, அயோக்கியன், மோசக்காரன், ஏமாற்றுப் பேர்வழி, உனக்குத் தீமையையே செய்பவன் என்று பலவாறாகக் குற்றம் சாட்டுகிறாள். இப்படி எல்லாம் தசரதனை குற்றம் சாட்டி கைகேயியிடம் சொல்லுகின்ற பொழுது, கைகேயியின் மனது மாறவில்லை. அவளுக்குச் சிரிப்புதான் வருகிறது. அடுத்து மந்தரை காரணத்தைப் போட்டு உடைக்கின்றாள்.

‘‘நாளை ராமனுக்கு மகுடாபிஷேகம் என்று தசரதன் நிச்சயித்திருக்கிறான் அதை அறியாமல் நீ இப்படி படுத்து கொண்டிருக்கிறாயே?’’ இந்த குண்டும் கைகேயியிடம் செயல்படவில்லை. ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று சொல்லியவுடன் கைகேயி செய்த செயல் என்ன தெரியுமா? மிகச் சிறந்த விலைமதிக்க முடியாத மாலையை எடுத்து, ‘‘நான் வெகு காலம் கேட்க வேண்டும் என்று நினைத்த அருமையான செய்தியை, என் காதில் முதல் முதலில் போட்ட உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்? இப்பொழுது நீ எதைக் கேட்டாலும் தருவதற்கு காத்திருக்கின்றேன். இதோ விலை மதிக்க முடியாத ஒரு முத்து மாலையை என்னுடைய மகிழ்ச்சியின் வெளிப்பாடாகத் தருகின்றேன். ஏற்றுக் கொள். இன்னும் உனக்கு என்ன வேண்டும் கேள்’’ என்று கைகேயி கேட்கிறாள்.

இப்படி மகிழும் கைகேயி, ராமன் வனம் போக வேண்டும் என்பதை முழு மனதோடு கேட்டிருப்பாளா? என்று சிந்திக்க வேண்டும்.தனக்கு முன்கூட்டியே இந்த விஷயத்தை தசரதன் சொல்லவில்லை என்றோ, ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த பிறகு தனக்கு இந்தச் செய்தி தெரிந்ததை நினைத்து வருத்தமோ கைகேயி அடையவில்லை என்பது இந்தக் காட்சியினால் நமக்கு புலனாகிறது. இதை தசரதன் நேரடியாகச் சொல்லாமல் ஒரு வேலைக்காரப் பெண் மூலம் தெரிந்து கொண்ட மந்தரை, தனக்குச் சொன்னதை நினைத்து சந்தோஷப்பட்டாள் என்று சொன்னால் கைகேயி எத்தனை கல்மிஷம் இல்லாதவளாக இருந்திருக்கிறாள் என்பது தெரிகிறது.

இப்படிப்பட்ட கைகேயியின் மனது எப்படி கலைந்தது? தூய மனது கலையுமா? என்று கேட்கலாம்.ஆம் தூய்மையான ஒரு குடம் பசும்பாலில் ஒரு துளி விஷம் போட்டால் மொத்தப் பாலும் விஷம் ஆகிவிடுவது போல, கல்மிஷம் இல்லாத கைகேயியை விஷமாக்கினாள், மந்தரை.ராமனின் மகுட அபிஷேகத்தை நினைத்து முதலில் சந்தோஷப்பட்ட கைகேயி, ராமனை காட்டுக்குச் செல்லும்படியாக எப்படி மனம் மாறினாள் என்பதில்தான் மனித உளவியலின் ரகசியம் அடங்கியிருக்கிறது. மனிதர்களின் குண நலன்களின் அடிப்படையில் பாதி மிருகம், பாதி மனிதன் என்று சொல்வார்கள். பாதி மிருகம் என்கிற பகுதியை (அதீத உணர்ச்சி) கண்டுகொள்ளாமல் வளர்த்துவிட்டு விட்டால், முழு மிருகம் ஆகிவிடுகிறது.

Related posts

சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?

துலாம் ராசி குழந்தை

ஜாதகத்தில் விவாகரத்தை கண்டுபிடிக்க முடியுமா?