வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான பணியாளரை கடித்த பெண் பயணி: உத்தரபிரதேச போலீஸ் வழக்குபதிவு

லக்னோ: விமானத்தில் வாக்குவாதம் செய்ததை தடுத்த விமான பணியாளரை கடித்த பெண் பயணி மீது உத்தரபிரதேச போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரான விமானத்தில், பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது பெண் பயணி ஒருவர், முண்டியடித்துக் கொண்டு சென்றார். விமானத்தில் ஏறிய பிறகு சக பயணிகளுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த விமான ஆண் பணியாளர் ஒருவர், அந்த பெண் பயணியை சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது திடீரென அந்த பணியாளரை, அந்த பெண் பயணி தாக்கினார். ஒருகட்டத்தில் அந்த பணியாளரின் மணிக்கட்டில் கடித்துவிட்டார். அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள், உடனடியாக அந்தப் பெண் பயணியை விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். பின்னர் அந்தப் பெண் சிஐஎஸ்எப் குழுவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி, சரோஜினி நகர் காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி அந்தப் பெண் மீது ஐபிசி பிரிவு 324, 504 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஆக்ராவைச் சேர்ந்த அந்தப் பெண் பயணி, மும்பையில் வசிக்கிறார். தனது சகோதரியை சந்திப்பதற்கு லக்னோவுக்கு வந்தார். மீண்டும் லக்னோவில் இருந்து மும்பை திரும்ப முயன்ற போது விமானத்தில் தகராறு செய்துள்ளார். அவர் மனரீதியாக அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. அதையடுத்து அவர் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்தப் பெண் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்’ என்றனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது