ஆற்காடு, நெமிலி, அரக்கோணத்தில் ஜமாபந்தி சாலை அமைக்க நில அளவீடு செய்து தர வேண்டும்

*ஆர்டிஓவிடம் பொதுமக்கள் மனு

ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் 1433ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தி கடந்த 21ம் தேதி ராணிப்பேட்டை கலெக்டர் ச.வளர்மதி தலைமையில் தொடங்கியது. இதில், வருவாய்த்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் 24 வகையான கணக்கு பதிவேடுகள் சரி பார்க்கப்படுகிறது.

மேலும், கிராமத்தில் பயிர் அடங்கல், நிலவரி வசூல், பயிர் தீர்வை, நிலத்தீர்வை, கிராம கணக்குகள், பயிர் சாகுபடி கணக்கு, பட்டா பெயர் மாற்றம், அரசு புறம்போக்கு நிலம் பராமரிப்பு பதிவேடு, ஆக்கிரமிப்பு இடம் பராமரிப்பு பதிவேடு, நிலங்கள் குறித்த பதிவேடு போன்ற பல்வேறு வகையான பதிவேடுகள் சரி பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஜமாபந்தியின் 3வது நாளான நேற்று ஆற்காடு நகரம் மற்றும் ஆற்காடு உள்வட்டத்தை சேர்ந்த சாத்தூர், தாஜ்புரா, முப்பதுவெட்டி, பூங்கோடு, மாங்காடு, சர்வந்தாங்கல், குஞ்சரப்பந்தாங்கல், லாடவரம், புன்னப்பாடி, அத்தித்தாங்கல் ஆகிய 11 கிராமங்களுக்கான தீர்வை கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பொது பிரச்னை உள்ளிட்ட 308 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கி தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதன் மீது உடனடியாக விசாரணை செய்து அறிக்கை வழங்கிட தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதில், உதவி இயக்குனர் (சர்வே) பொன்னையா, தாசில்தார் அருள்செல்வம், ஜமாபந்தி மேலாளர் பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரூபி, வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி, வேளாண்மை உதவி இயக்குனர் சூரியநாராயணன், உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன், நகராட்சி மேலாளர் முரளி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

4வது நாளான இன்று ஆற்காடு உள்வட்டத்தை சேர்ந்த புதுப்பாடி, கிளாம்பாடி, முள்ளுவாடி, குக்குண்டி, பாப்பேரி, கீரம்பாடி, கடப்பந்தாங்கல், வளவனூர், ஒழலை, செம்பேடு, கரிவேடு, கே.வேளூர் ஆகிய 12 கிராமங்களுக்கான கணக்குகள் சரி பார்க்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் ச.வளர்மதி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறார்.

நெமிலி: நெமிலி தாலுகா அலுவலகத்தில் 3வது நாளாக நேற்று ஜமாபந்தி நடந்தது. இதில், நெமிலி உள்வட்டத்தை சேர்ந்த செல்வமந்தை, மேலாந்துறை, நாகவேடு, கீழாந்துறை, சிறுணமல்லி, ஓச்சலம், கீழ்களத்துார், புன்னை, வேட்டாங்குளம், நெமிலி, கறியாக்குடல், அசநெல்லிகுப்பம், கீழ்வெங்கடாபுரம், சயனபுரம் ஆகிய கிராம மக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். டிஆர்ஓ சுரேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தாசில்தார் ஜெயபிரகாஷ், துணை தாசில்தார் சமரபுரி, சுரேஷ், தேர்தல் துணை தாசில்தார் பன்னீர்செல்வம், விஏஓ பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நெமிலியில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், வேட்டாங்குளம் சில்வர்பேட்டையை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் மனு அளித்தனர்.

அதேபோல், நெமிலி பேரூராட்சி 7வது வார்டு மற்றும் 8வது வார்டு பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் குடும்பங்கள் சடலங்களை எரிக்க எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தர ேவண்டும் என்று பேரூராட்சி உறுப்பினர் நிரோஷா தலைமையிலும், சிறுணமல்லி ஊராட்சி புதுமல்லி பகுதியில் 40 பயனாளிகளுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை கிராம நத்தம் கணக்கில் ஏற்ற வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம் தலைமையிலும், புன்னை- பாணாவரம் சாலையில் வளைவு பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் டிஆர்ஓவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன்படி, 3வது நாளில் மொத்தம் 260 மனுக்கள் பெறப்பட்டது.

அரக்கோணம்: அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் ஆர்டிஓ பாத்திமாவிடம் அன்வர்திகான்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அசாருதீன் நேற்று கீழ்ஆவதும் செல்லும் சாலை அமைக்க நில அளவீடு செய்து தர வேண்டும், முஸ்லிம் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், ராமாபுரத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு இடத்தினை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். அப்போது, தாசில்தார் செல்வி மற்றும் அதிகாரிகள்  உடனிருந்தனர்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு