ஆரணி அரசுப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: பொன்னேரி எம்எல்ஏ வழங்கினார்

பெரியபாளையம்: ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 299 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 176 மாணவிகளுக்கும், அருகில் உள்ள ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 123 மாணவர்களுக்கும் என மொத்தம் 299 மாணவ- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் காவேரி ஏழுமலை, ஏகாம்பரம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆரணி பேரூர் திமுக செயலாளர் முத்து, அவைத்தலைவர் ரமேஷ், பொருளாளர் கரிகாலன், ஆரணி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் கலந்துகொண்டு மாணவ – மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். மேலும், அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று, அதில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், சிலம்பம் போட்டியில் மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவிக்கும் நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். அப்போது, 100 சதவீத தேர்ச்சியை பெற்று பள்ளிக்கும், தொகுதிக்கும் சிறப்பை சேர்க்க வேண்டும் என எம்எல்ஏ, மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

அப்போது, இப்பள்ளி வளாகத்தில் சுமார் 100 மீட்டர் சுற்றுச்சுவர் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று சுற்றுச்சுவர் கட்ட வேண்டிய பகுதியை பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தார். நிகழ்ச்சியில், எஸ்எம்சி தலைவர்கள் சத்யா, நாகலட்சுமி, ரவி, ரகுமான்கான், நிலவழகன், கலையரசி, நீலகண்டன், விஜயகுமார், முரளி, ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்