ஆரணி அடுத்த இரும்பேடில் விவசாய பயன்பாடு எனக்கூறிவிட்டு டிப்பர் லாரிகளில் இரவு, பகலாக மொரம்பு, வண்டல் மண் கடத்தல்

* விவசாயிகள் மண் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்

* கனிமவளத்தை பாதுகாக்க மக்கள் கோரிக்கை

ஆரணி : ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களில் சாகுபடி குறையும் நிலங்களுக்கு வண்டல், முரம்பு, களி மண் தேவைப்படும் விவசாயிகள் பொதுப்பணித்துறை மற்றும் ஊரகவளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள ஏரிகள், குளம் நீர்தேக்க பகுதிகளில் இருந்து மண் எடுத்து விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள தற்போது புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி, ஆன்லைன் அல்லது தாசில்தாரிடம் மனு கொடுத்து ஏக்கருக்கு 30 டிராக்டர்களும், நஞ்சை நிலத்திற்கு 25 டிராக்டர்கள் வரை வண்டல் மண், மொரம்பு, களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு 2 முதல் 3 நாட்கள் வரை அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால், விவசாயிகளும் அதிகாரிகளிடம் முறையாக அனுமதிப் பெற்று ஏரிகள், சம்மந்தப்பட்ட நிலங்களில் தேவைப்படும் மண் எடுத்து நிலத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாகவே ஆரணி பகுதிகளில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, மணல் மாபியாக்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சிலர் அவர்களுக்கு தெரிந்த விவசாயிகளுக்கு ஒரு தொகையை கொடுத்து அவர்களின் நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து விவசாய பயன்பாட்டிற்கு எனக்கூறி வண்டல், முரம்பு மண் தேவையென போலியாக விண்ணப்பித்து, மண் எடுக்க அனுமதிப்பெற்று கொண்டு, மாபிய கும்பல்கள் செங்கல் சூளைகள், புதிய வீட்டுமனைகள் அமைத்தல், கட்டிடப்பணிகளுக்கு ஏரிகளில் இருந்து இரவு, பகலாக வண்டல் மண், மொரம்பு மண் ஜேசிபி, ஹிட்டாச்சி மூலம் டிப்பர் லாரிகள், டிராக்டர்களில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி, ஆகாரம் ஊராட்சி உள்ள ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஏரியில் நேற்று முன்தினம் விவசாய பயன்பாட்டிற்கு என கூறி அனுமதி இல்லாமல் ஜேசிபி மூலம் 15 க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மொரம்பு மண் கடத்தி சென்று புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒரு கட்டிடத்திற்கு விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து 2 டிராக்டர்களை பறிமுதல்செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல், இரும்பேடு ஏரியில் நேற்றுமுன்தினம் விவசாயத்திற்கு என்று அனுமதி பெற்று முரம்பு மண் கடத்திய 2 டிப்பர் லாரிகள், ஒரு ஹிட்டாச்சியை ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் அதிமுக எம்எல்ஏ ஒருவர் பெயரை கூறியதாக தெரிகிறது. ேமலும் மண் கடத்தும் மாபியாக்கள் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் புகார்கள் உள்ளது. மேலும் சேவூர் பைபாஸ் சாலை அருகே கட்டிடப் பணிகளுக்கும் மொரம்பு மண் கொட்டி சமன் செய்து வந்தனர். இதனால், அப்பகுதி மக்கள் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலை அறிந்ததும் அங்கிருந்த மாபியாக்கள் ஏரியில் இருந்து டிப்பர் லாரிகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். ஹிட்டாச்சியை மட்டும் ஏரியின் அருகே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினர். சம்பவ இடத்திற்கு வந்த விஏஓ ராமச்சந்திரன் மொரம்பு மண் கடத்திய நபர்கள் குறித்தும், டிப்பர் லாரி, ஹாட்டாச்சி உரிமையாளர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று இரவிலும் தொடர்ந்து மண் கடத்தல் அரங்கேறியது. இப்படி ஏரியில் அனுமதியின்றி மொரம்பு மண், வண்டல் மண் என்று கனிமவளம் கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, விவசாயிகள் தான் மண் எடுக்கிறார்களா? என்று உறுதிபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, ஆர்டிஓ பாலசுப்பிரமணியனிடம் கேட்டதற்கு, ‘ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்கும், மண் பாண்டம் செய்வதற்கு மட்டுமே, வண்டல்மண், களிமண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், விவசாய பயன்பாட்டிற்கு எனக்கூறி மண் எடுக்க அனுமதிப்பெற்று தவறான முறையில் ஏரிகளில் முரம்பு மண் எடுத்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது