அரச்சலூர் நாகமலையில் அட்டகாச சிறுத்தையை பிடிக்க 7 குழுக்கள் அமைப்பு

*13 சிசிடிவி கேமரா, 4 இடங்களில் கூண்டு வைப்பு; அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

மொடக்குறிச்சி : அரச்சலூர் நாகமலையில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க 13 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு நான்கு இடங்களில் கூண்டுகள் அமைத்து, ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் நாகமலை உள்ளது. இந்த மலையானது கிழக்கு தலவுமலையிலிருந்து மேற்கு தலவுமலை வரை 6 கி.மீ. தூரம் உள்ளது. இந்த மலையில் மான், குரங்கு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

இந்த மலையின் மேல் தீர்த்தக் குமாரசாமி முருகன் கோவில் உள்ளது. இந்த நாகமலையின் ஒருபுறம் அரச்சலூர், குறிஞ்சி நகர், வீரப்பம்பாளையம், நடுப்பாளையம், பத்தையம் பாளையம், மீனாட்சிபுரம், மேற்கு தலவுமலை போன்ற ஊர்களும், மற்றொரு புறம் அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஓம் சக்தி நகர், வெள்ளி வலசு, சங்கரன் காடு, பழையபாளையம், ஊஞ்சபாளையம் போன்ற ஊர்களும் உள்ளன.

இந்நிலையில், நாக மலையின் அடிவாரத்தில் ஈரோடு ஆனைக்கல் பாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (59) என்பவரின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். கடந்த 18ம் அதிகாலை பால் கறப்பதற்காக மாட்டு கொட்டகைக்கு சென்றபோது அங்கு கட்டி இருந்த கன்று குட்டியை மர்ம விலங்கு இழுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு வனத்துறை அதிகாரி சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் பார்வையிட்டு வனவிலங்கின் கால் தடத்தை பதிவு செய்தனர். இந்த ஆய்வில் கன்றுக் குட்டியை இழுத்து சென்ற விலங்கு சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 இடங்களில் சிசிடிவி கேமராவும், 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. மேலும், வனத்துறையின் சார்பில் அரச்சலூர், அனுமன்பள்ளி பகுதிகளில் கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்றும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மலைப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், நாகமலையில் உள்ள தீர்த்த குமாரசாமி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கடந்த 23ம் தேதி அட்டவணை அனுமன்பள்ளி சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தோட்டத்தில் கட்டியிருந்த ஒரு ஆட்டை சிறுத்தை கவ்வி சென்றது.

இதனால், அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் நாகமலையில் உள்ள சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்பறும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கலெக்டர் மற்றும் அமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி அரச்சலூர் நாகமலையில் அடிவாரத்தில் சண்முகசுந்தரம் என்பவரது தோட்டத்தில் கட்டி இருந்த கன்று குட்டியை சிறுத்தை இழுத்துச் சென்ற இடத்தை நேரில் பார்வையிட்டு, மலை அடிவாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், கூண்டுகள் மற்றும் மலைப்பகுதி ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அரச்சலூர், வாய்ப்பாடி, அட்டவணை அனுமன்பள்ளி, கொங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என முதல்வர் கவனத்திற்கு சென்று, அவரது அலுவலகத்தில் இருந்து வனத்துறை அமைச்சருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், கலெக்டர் நடவடிக்கை எடுக்கும் விதமாக வனத்துறையினருடன் கலந்து பேசி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். வனத்துறையின் சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கூண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

அதன் மூலம் சிறுத்தை என்பதை உறுதி செய்துள்ளனர். 13 இடங்களில் சிசிடிவி கேமராவும், நான்கு இடங்களில் கூண்டும் வைத்துள்ளனர். மேலும், கூடுதலாக சில இடங்களில் கூண்டு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுத்தை பிடிப்பதற்காக தலா 3 பேர் கொண்ட ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை பிடிப்பதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதனை பெற்றுள்ளார்கள்.

சிறுத்தையை பிடிக்கும் வரை மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். ஒரு சிறுத்தை மட்டும் தான் உள்ளது. அதுவும் ஆண் சிறுத்தை. கன்றுக்குட்டியை இழுத்துச் சென்ற பின்னர் ஆறு நாட்கள் வெளியில் வரவில்லை. அடுத்து எப்போது வரும் என்று வனத்துறையினர் ஓரளவு கணித்துள்ளனர்.

இப்பகுதியில் பாறைகள் மற்றும் குவாரிகள் இருப்பதால் பதுங்கி இருக்கலாம். சிறுத்தையால் ஆடு மாடுகளை இழந்த விவசாயிகளுக்கு அரசின் சார்பில் நஷ்ட ஈடு கொடுக்கப்படும். ஆட்டுக்கு 3 ஆயிரம் ரூபாயும், மாட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் 4 இடங்களில் கூண்டு வைக்கப்படும். எப்படியாவது வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து விடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாவட்ட வன அலுவலர் சுதாகர், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல் மற்றும் வன அலுவலர்கள், வனச்சரகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 55 வருடம் சிறை