ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: அனைத்து வகை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கான உச்சவரம்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 என்றும், இதர பிரிவினருக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.பிறகு இதில் திருத்தம் செய்யப்பட்டு 1.1.23முதல் பொதுப் பிரிவினருக்கு 42, இதர பிரிவினருக்கு 47 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போருக்கு உச்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53, இதரப் பிரிவினருக்கு 58 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை அடுத்து பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் மேற்கண்ட அறிவிப்பின்படி உச்ச வயது வரம்பு நிர்ணயித்து உரிய அரசாணை வழங்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொண்டார். இதன்படி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாகவும், பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் ஆய்வு செய்து, பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 53 என்றும், இதர பிரிவினருக்கு 58 என்றும் நிர்ணயித்து அரசு ஆணை வெளியிடுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்