சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம்: எடப்பாடி புதிய திட்டம்

சேலம்: வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கு மாவட்ட செயலாளர்களாக உள்ள மாஜி அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். ஓ.பி.எஸ்சுடன் 4 மாவட்ட செயலாளர்கள் சென்றனர். அந்த இடத்திற்கு மாவட்ட செயலாளர்களை நியமித்த நிலையில் வேறெந்த மாவட்ட செயலாளரையும் மாற்றவில்லை. ஜெயலலிதா நியமித்த மாவட்ட செயலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 5க்கும் மேற்பட்ட தேர்தல்களில் குறிப்பிட்ட வெற்றியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பெறவில்லை. இதனால் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தற்போது தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்க இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். 64 மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில் அதனை இரண்டு அல்லது மூன்று மடங்குகளாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார். இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற கணக்கில் மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளார். இவ்வாறு அதிகரிப்பதால் எல்லா நிர்வாகிகளுக்கும் பதவி வழங்க முடியும். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பெரும் செல்வாக்கு உள்ள அதிமுக மாஜி அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களாக இருந்து வருகின்றனர்.

8 தொகுதிகளை கவனிக்க கூடிய மாவட்ட செயலாளர்கள் இந்த புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் தற்போது இரண்டு மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதனை 5 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆத்தூர், கெங்கவல்லிக்கு ஒரு மாவட்ட செயலாளரும், ஏற்காடு, வீரபாண்டிக்கு ஒருவரும், சங்ககிரி, இடைப்பாடிக்கு ஒருவரும், மேட்டூர், ஓமலூருக்கு ஒருவரும், சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும் என பொறுப்பு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிமுகவினர் தெரிவித்தனர். சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுக்கும் அதிமுகவில் 60 வட்ட செயலாளர்கள் உள்ளனர். இந்த வட்ட செயலாளர்கள் பொறுப்பையும் 10 பூத்துக்கு ஒரு வட்ட செயலாளர் என பிரிக்க இருக்கின்றனர். இதன்படி 120 பேர் வட்டச்செயலாளர்களாக ஆக்கப்படுவார்கள். தற்போது 8 பகுதி செயலாளர்கள் உள்ளனர். இதனை 16 ஆக உயர்த்தவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுகவினரிடையே பதவியை பெறும்வகையில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அதிமுகவினர் கூறுகையில், ‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து நிர்வாகிகளுக்கும் பொறுப்பு வழங்கி அவர்கள் தேர்தல் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்,’’ என்றனர்.

 

Related posts

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!