பொறியியல் பணிகளுக்கான நியமன ஆணைகளை உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 17 மாதங்களுக்கு முன் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டு பல மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததால் பொறியியல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 831 பேரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 190 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பின்னர் நடத்தப்பட்ட நில அளவையர், வரைவாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். பொறியியல் பணி எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அப்பணியில் சேரவில்லை.

அதுமட்டுமின்றி, அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சார்பு பொறியியல் பணிக்கான போட்டித் தேர்வுகள், பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் சாலை ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் ஆகியவற்றை இவர்கள் மிகவும் எளிதாக எழுதி தேர்ச்சி பெற முடியும் என்றாலும், தாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றத் தேர்வில் வேலை கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கின்றனர். பொறியியல் பணிக்கான ஆள்தேர்வு கடைசியாக 2019ம் ஆண்டில் தான் நடைபெற்றது. அதன்பின் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆள்தேர்வு நடத்தப்படவில்லை. அதன்பின் 2022ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பொறியியல் பணிகள் இப்போது தான் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. இடைப்பட்ட காலத்தில் ஆள்தேர்வு நடைபெறவில்லை என்பதால் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

இத்தகைய தருணத்தில் பொறியியல் பணிக்கான ஆணை வழங்குவதை தாமதிப்பது நியாயமல்ல. எனவே, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் இடம் பெற்றுள்ள 12 வகையான பணிகளுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி