வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களாக 133 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 133 பேருக்கு பணி நியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2023ல் நடத்தப்பட்ட தேர்வு மூலம் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி வாழ்த்தினார். இதன்மூலம், வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் விவசாய பெருங்குடி மக்களுக்கு விரைவில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகளை பெற்ற தோட்டக்கலை மற்றும் வேளாண்மை அலுவலர்கள் முதல்வர் மற்றும் அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண்மை-உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் சங்கர், வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்