சந்திப்பதற்காக ‘அப்பாயின்ட்மென்ட்’ கொடுத்துவிட்டு பின்பக்க வாசல் வழியாக ஒன்றிய அமைச்சர் ஓட்டம்: திரிணாமுல் பெண் எம்பி காட்டம்

புதுடெல்லி: திரிணாமுல் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக அப்பாயின்ட்மென்ட் கொடுத்துவிட்டு, ஒன்றிய பெண் அமைச்சர் பின்பக்க வாசல் வழியாக ஓடிவிட்டதாக திரிணாமுல் எம்பி குற்றம்சாட்டி உள்ளார். மேற்குவங்க மாநிலத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை என்பதை கண்டித்து, டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கவும் திரிணாமுல் கட்சியினர் முன் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் கூறிய நேரத்தில் அமைச்சரை சந்திக்க செல்லவில்லை. இதுகுறித்து அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி வெளியிட்ட பதிவில், ‘திரிணாமுல் எம்பிக்கள் என்னைச் சந்திக்க வரவில்லை. சுமார் 2.30 மணி நேரம் என்னுடைய நேரத்தை வீணடித்துள்ளனர். அவர்களுக்காக காத்திருந்து இரவு 8.30 மணிக்கு தான் எனது அலுவலகத்தை விட்டு வெளியேறினேன்’ என்று கூறியுள்ளார்.

இதற்கு திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா பதிலடி பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘மன்னிக்கவும்… அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அவர்களே… நீங்கள் பொய் சொல்கிறீர்கள். எங்களது கட்சி பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தீர்கள். அவர்களின் பெயர்களையும் சரிபார்ப்பதற்காக, எங்களை 3 மணிநேரம் காத்திருக்கச் செய்தீர்கள். பின்னர் பின் கதவு வழியாக ஓடிவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திரிணாமுல் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ‘எங்களை சந்திப்பதற்காக அமைச்சர் அப்பாயின்ட்மென்ட் கொடுத்த பிறகும், அவர் எங்களை சந்திக்கவில்லை. அதேநேரம் மேற்குவங்க எதிர்கட்சி தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரியை, மாலை 4 மணிக்கு சந்தித்தார்’ என்று குற்றம்சாட்டினார்.

ஆணவத்திற்கு எல்லையே இல்லை!
ஒன்றிய அமைச்சரை திரிணாமுல் பிரதிநிதிகள் சந்திக்க முடியாததால், அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை டெல்லி போலீசார் அப்புறப்படுத்தி தடுத்து வைத்தனர். நேற்றிரவு தான் அவர்களை விடுவித்தனர். இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட பதிவில், ‘ஜனநாயகத்திற்கு இன்று கருப்பு தினம். மேற்குவங்க மக்களை அவமதித்துள்ளீர்கள். ஜனநாயக விழுமியங்களை கைவிட்டீர்கள். ஏழைகளுக்கு வழங்க வேண்டிய நூறுநாள் திட்ட நிதியை தடுத்து நிறுத்தி விட்டீர்கள். எங்கள் பிரதிநிதிகள் மீது மிருகத்தனமாக நடந்து கொண்டீர்கள்.

உண்மையைப் பேசியதற்காக திரிணாமுல் தலைவர்களை பாஜகவின் டெல்லி காவல்துறை தாக்கியுள்ளது. எங்களது பிரதிநிதிகளை சாதாரண குற்றவாளிகளைப் போல போலீஸ் கையாண்டது. உங்களது ஆணவத்திற்கு எல்லையே இல்லை, எங்களின் குரலை அடக்குவதற்காக எல்லாவித எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள்!’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

நில அபகரிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!!

25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்