மேல் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்: ஐகோர்ட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தரப்பு வாதம்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என்று மேல்விசாரணையில் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 20 தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்குகளிலிருந்து அமைச்சர் உட்பட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், வழக்கில் புதிய ஆவணங்கள் இல்லாதபோது வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்திக்கு உரிமை உள்ளது. புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கினாலும் தொடர் விசாரணையில்தான் ஒருவர் குற்றவாளியா? இல்லையா? என்பது தெரியவரும். புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரணை அமைப்பு தனது விசாரணையை நடத்தி முடித்துள்ளது. விசாரணை அறிக்கை அடிப்படையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எந்த அடிப்படையில் அமைச்சர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பதற்கான காரணங்களை நீதிமன்றம் அறிய விரும்புகிறது என்றார். அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய விசாரணை அதிகாரியிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இருந்ததால் மேற்கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

முதலில் விசாரணை செய்த அதிகாரி, அதை கவனிக்க தவறிவிட்டார். விசாரணை அதிகாரியின் முடிவை நீதிமன்றம் ஏற்க எந்த தடையும் இல்லை. ஒரே வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்க வாய்ப்புள்ளது. நீதிமன்றத்தில் என்ன ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகிறதோ, அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது என்றார். அதற்கு, அரசியல் தலைவர்கள் வழக்கில் மட்டும் ஏன் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது? அனைத்து வழக்குகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் தரப்பில், எஸ்.பி தலைமையிலான விசாரணை அமைப்பு 132 சாட்சிகளிடம் விசாரணை செய்தது. 60 புதிய சாட்சிகள் வழக்கில் சேர்க்கப்பட்டனர் என்று தெரிவித்தார். இதையடுத்து, விசாரணை இன்று தொடரும் என்று நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது