புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் 3 அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் 3 மாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உப்பனாறு வாய்க்காலில் பள்ளம் தோண்டிய போது கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சரிந்தது. வாய்க்கால் பணியின்போது தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக கட்டடம் தரைமட்டமானது.

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி பகுதியிலுள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவரை இழந்த இவர் தனது மகள் மற்றும் கார் ஓட்டுநரான தனது மருமகனுடன் வசித்து வருகிறார். சாவித்திரிக்கு அப்பகுதியில் வழங்கப்பட்ட மனை பட்டாவில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வசித்து வந்தனர். குடியிருப்பின் புதுமனை புகுவிழா வரும் பிப்.01ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதனிடையே சாவித்திரி வீட்டின் பின்பகுதியியில் உப்பனாரு கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. கழிவுநீர் வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சாவித்திரி வீட்டின் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால் பணி நடைபெற்று வந்தபோது அவரது வீடு எதிர்பாராத விதமாக லேசாக சாய்ந்துள்ளது.

இதையடுத்து 3 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு முழுவதுமே சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக குடியிருப்பிலும், அதனருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குடியிருப்பு சரிந்த இடத்தில் பார்வையிட்டார். பின்னர் வீடு இழந்தவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்