ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும்

*ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்

*விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் கண்மாய்களிலும் ஓடைகளிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கண்மாய்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரினால் தண்ணீர் செல்வதில் சிக்கல் இருக்காது என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் 100க்கும் மேற்பட்ட உட்கிரமங்களும் உள்ளன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆண்டிபட்டி சுற்றியுள்ள பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, மாயாண்டிபட்டி, பாலக்கோம்பை, அணைக்கரைப்பட்டி, புள்ளிமான்கோம்பை, ரெங்கசமுத்திரம், நாச்சியார்புரம், முத்தனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கத்தரி வெண்டை, தக்காளி, முருங்கை, வாழை மற்றும் பூ வகைகளில் மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட பல்வேறு பூ ரகங்களும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தவிர மானாவாரிய பயிர் சாகுபடி முக்கிய பங்களிக்கிறது. இந்தப் பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த பகுதியில் ஆசாரிப்பட்டி கண்மாய், கன்னியப்பபிள்ளைபட்டி கண்மாய், வரதராஜபுரம் கண்மாய், அதிகாரி கண்மாய், செங்குளம், கருங்குளம் கண்மாய், மும்மூர்த்தி கண்மாய், தெப்பம்பட்டி கண்மாய், கோவில்பட்டி கண்மாய், ஜம்புலிபுத்தூர் கண்மாய் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.

ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதியில் ஏராளமான கண்மாய்கள் இருந்தாலும் விவசாயிகள் கண்மாய் பாசனம் செய்ய முடியாமல் கிணற்றுப் பாசனம் செய்து வருகின்றனர். அதற்கு காரணம், திமுக ஆட்சியில் விவசாயிகளின் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களை கடந்த ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்தனர். அதனால், பல்லாயிரக் கணக்கான பரப்பளவிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆண்டிபட்டி பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கண்மாய் ஓடைகள் ஆக்கிரமிப்பாலும், தூர்வாரப்படாததாலும், நீர்வரத்து இல்லாததாலும் கால்நடை வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களில் கால்நடைகள் பாதியாக குறைந்துள்ளது. குறிப்பாக கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்க்ப்பட்டு வந்தனர்.

ஆனால் தற்போது தண்ணீர் இல்லாததால் 2 ஆயிரத்திற்கும் குறைவான ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.முல்லைப் பெரியாறு, வைகை ஆறு உள்ளிட்டவைகள் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு பயன் இல்லாமல் இருக்கிறது. தலைமடையில் இருக்கும் வைகை அணை ஐந்து மாவட்ட விவசாயத்திற்கு முக்கிய பங்களித்து வருகிறது. ஆனால் ஆண்டிபட்டியில் வைகை அணை இருந்தும் பயனில்லாமல் உள்ளது.

ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்த நிலையில் கண்மாய்கள் நீர்வரத்து ஓடைகள் உள்ளிட்ட இடங்களில் நீர்வரத்து ஏற்பட்டது. ஓரளவு நீர்வரத்து ஏற்பட்டிருந்தாலும் கண்மாய்கள் ஓடைகள் தூர்வரப்படாமல் இருப்பதாலும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும் விவசாயத்திற்கு பயன்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் காரணமாக ஆண்டிபட்டி கிராம பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. கண்மாய்கள் நீர்வரத்து ஓடைகள் உள்ளிட்ட இடங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

விவசாயத்திற்கு கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. விவசாய நிலங்களும் தரிசு நிலமாக காணப்பட்டது. அதன் பின்னர் தற்போது கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தினந்தோறும் ஆண்டிபட்டி நகர் மற்றும் கிராம புற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து ஓடைகளிலும் கண்மாய்களிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கண்மாய்களிலும், ஓடைகளிலும் நீர்வரத்து ஏற்பட்டு இருந்தாலும், தூர்வாரப்படாமல் இருப்பதாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதாலும் கண்மாய்களிலும் ஓடைகளிலும் ஏற்படும் தண்ணீர் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படாமல் உள்ளது.

கோடை மழை ஆண்டிபட்டி பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஜூன் மாதத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தேனி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய பரவலாக மழை பெய்யும். பின்னர் தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்தில் தீவிரமடையும்.

எனவே, ஆண்டிபட்டி பகுதியில் விவசாயம் தடையின்றி நடைபெறவும் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், கண்மாய்கள் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், ஓடைகளிலும் கண்மாயிலும் முள்செடிகள் அதிகளவு வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் நீர்வரத்து ஏற்படுவதற்கு சிரமமாக உள்ளது.
எனவே கண்மாய்களிலும், ஓடைகளிலும் ஆக்கிரமப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீர்நிலைகள் பழைய நிலைக்கு வரணும்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே, ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்