விடைத்தாள் திருத்துவதில் குளறுபடி 1000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: தேர்வுத்துறை பரிந்துரை

சென்னை: கடந்த ஆண்டுநடந்த பொதுத் தேர்வின் விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு, தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது. மேலும், இந்த 1000 ஆசிரியர்களை இந்த தேர்வுப் பணிகளில் இருந்துவிலக்கு அளிக்கவும் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையர் பள்ளிகள், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

தேர்வுகள் நடக்கும் போது ஒவ்வொரு பாடத் தேர்வு முடிந்த பிறகு அந்த பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள் சென்னையில் உள்ள தேர்வுத் துறைக்கு வரவழைக்கப்பட்டு, விடைத்தாளின் முகப்பு பக்கங்களை நீக்கி அதற்கு பதிலாக டம்மி எண்கள் போடப்பட்டு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் அந்தந்த பாடங்களுக்கான முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்த பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடக்கும் இந்தப் பணிகளில் ஈடுபடும் பாட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்ட பிறகு, விடைத்தாள் திருத்தியது குறித்து தேர்வுத்துறை ஆய்வு மேற்கொள்ளும் அதன் அடிப்படையில் விடைத்தாள் திருத்துவதில் சரியாக கவனம் செலுத்தாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை செய்வது வழக்கம். விடைத்தாள் திருத்தும் பணியில் மோசமாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு 17பி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு, அதற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அந்த ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்.

அந்தவகையில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதும், விடைத்தாள் திருத்தும் பணியில் சரியான மதிப்பீடு செய்யாதது, கவனக்குறைவாக இருந்தது, மதிப்பெண்கள் குறைத்து போட்டது போன்ற செயல்களில் ஈடுபட்டதும்தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள், குறித்த பெயர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் படி 1000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதில் மேற்கண்ட குளறுபடிகளை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெ ரிவித்துள்ளனர். இந்நிலையில், விரைவில் தொடங்க உள்ள 10, 11 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளின்போது மேற்கண்ட இந்த 1000 ஆசிரியர்களை தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதை தேர்வுத்துறை தவிர்த்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்த 1000 ஆசிரியர்களை தேர்வு கண்காணிப்பு பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இந்த ஆண்டு ஈடுபடுத்தக் கூடாது என்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்